தீவிரவாதிகள், தேசவிரோத சக்திகளுடன் தொடர்பா? – தூத்துக்குடி உட்பட 22 இடங்களில் என்ஐஏ சோதனை
தேசவிரோத குழுக்கள் மற்றும் தீவிரவாத நெட்வொர்க் உடன் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தின் பேரில், நாட்டின் 5 மாநிலங்களில் மொத்தம் 22 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) நேற்று திடீர் சோதனை நடத்தியது. தமிழகத்தில் தூத்துக்குடியும் இதில் அடங்கும்.
தீவிரவாத செயல்பாடுகளுக்கான நிதியுதவி, ஆள்சேர்ப்பு மற்றும் ஸ்லீப்பர் செல் இயக்கங்களை தடுக்கும் வகையில் என்ஐஏ தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சோதனைகளில், தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும், இளைஞர்களை தீவிரவாத இயக்கங்களில் இணைக்க மூளைச் சலவை செய்ய முயன்றதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தூத்துக்குடியில் விசாரணை: செங்கல்பட்டு மாவட்டத்தில், தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த பிஹாரை சேர்ந்த முகமது (22) கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிஹாரை சேர்ந்த முஸ்பிக் ஆலம் என்ற நபருடன் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தூத்துக்குடி அருகே சிலுவைப்பட்டியில் தங்கி வந்த முஸ்பிக் ஆலம் மீது நேற்று காலை என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அங்கு அவருடன் தங்கியிருந்த ஏழு பேரில் நான்கு பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. முஸ்பிக் ஆலத்தின் செல்போன் பரிசோதிக்கப்பட்டது. பின்னர், அவரையும் அவரது நண்பர்கள் மூவரையும் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டனர். மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் அவர்களிடம் கேள்வி எழுப்பினர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மொத்த சோதனை விவரம்: ஜம்மு காஷ்மீரில் 9 இடங்கள், பிஹாரில் 8 இடங்கள், உத்தரப் பிரதேசத்தில் 2 இடங்கள், கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாட்டில் தலா ஒரு இடம் என 22 இடங்களில் என்ஐஏ ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது. மாநில காவல்துறையுடன் இணைந்து, தீவிரவாத நிதி, ஆள்சேர்ப்பு மற்றும் வெளிநாட்டு ஆதரவுடன் நடக்கும் சதித்திட்டங்களில் யாராவது ஈடுபட்டுள்ளனரா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.