ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு
பிஹாரில் சமீபத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து ஏடிஆர் அமைப்பு உட்பட பலரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆதார் அட்டையை 12-வது அடையாள ஆவணமாக ஏற்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
விசாரணையில் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “உச்ச நீதிமன்ற உத்தரவு இருந்தும் வாக்குச்சாவடியில் ஆதார் அட்டை அடையாள ஆவணமாக ஏற்கப்படவில்லை” என வாதிட்டார்.
இதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, “ஆதார் அட்டை அடையாள ஆவணமாக ஏற்கப்படுகிறது. ஆனால் குடியுரிமைக்கான ஆவணமாக கருத முடியாது” என தெரிவித்தார்.
நீதிபதிகள் சூரியகாந்த், ஜோய்மால்ய பக்சி அமர்வு, “ஆதாரை குடியுரிமை ஆவணமாகக் கருத முடியாது. ஆனால் அடையாள ஆவணமாக ஏற்றுக் கொள்ளலாம். பிஹாரில் நடைபெற்ற திருத்தப் பணியில் ஆதாரை 12-வது ஆவணமாக சேர்ப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்” என உத்தரவிட்டது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 15-க்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கான கால அட்டவணையை சமர்ப்பிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.