50 நாட்களாக மவுனம் காக்கும் ஜெகதீப் தன்கர் பேச வேண்டுமென நாடு காத்திருக்கிறது: காங்கிரஸ்
“முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 50 நாட்களாக அசாதாரண மவுனத்தை கடைபிடித்து வருகிறார். அவர் பேசுவதற்காக நாடு தொடர்ந்து காத்திருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.”
குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்த ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலை காரணமாக கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து, குடியரசு துணைத் தலைவர் பதவி காலியாக அறிவிக்கப்பட்டது. பிறகு அந்த பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அந்த தேர்தலில், ஆளும் கூட்டணி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார். எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுவார். இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:
“கடந்த 50 நாட்களாக ஜெகதீப் தன்கர் வழக்கத்திற்கு மாறான மவுனத்தை கடைபிடித்து வருகிறார். இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடங்கியுள்ளது. மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் விவசாயிகள் புறக்கணிக்கப்படுவது, அதிகாரத்தில் உள்ளவர்களின் அகங்காரம் ஏற்படுத்தும் ஆபத்துகள் போன்றவற்றில் அவரது கவலையை வெளிப்படுத்திய பின்னர் ஜெகதீப் தன்கர் திடீரென பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அவர் பேசுவதற்காக நாடு தொடர்ந்து காத்திருக்கிறது.”