வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார் பிரதமர் மோடி: இமாச்சல், பஞ்சாபுக்கு ரூ.3,100 கோடி நிதியுதவி

பிரதமர் நரேந்திர மோடி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று நேரில் பார்வையிட்டு, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இமாச்சல், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் கன மழையால் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது; பஞ்சாபில் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்தன.

டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஓட்டுப்போட்ட பிரதமர் மோடி, மாலை நேரத்தில் இமாச்சலுக்கு புறப்பட்டு, ஹெலிகாப்டரில் மண்டி, குல்லு மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பு இடங்களை ஆய்வு செய்தார். பின்னர் மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்த கூட்டத்தில் மாநில ஆளுநர் சிவ் பிரதாப் சுக்லா, முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து, அதிகாரிகளிடமிருந்து பாதிப்புகளின் நிலை குறித்து தகவல் பெற்றனர். இமாச்சலில் மொத்தம் 370 பேர் உயிரிழந்தனர்; இதில் 205 பேர் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக, 165 பேர் சாலை விபத்தால் உயிரிழந்தனர்.

பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உரையாடினார். வெள்ளத்தில் குடும்பத்தினரை இழந்த 11 மாத குழந்தை நீத்திகாவையும் பிரதமர் சந்தித்தார். மீட்பு பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், மாநில குழுவினரும் பிரதமருடன் கலந்துரையாடினர்.

நிவாரணம்:

  • இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி.
  • வீடுகளை இழந்த மக்களுக்கு பிரதமரின் ஆவாஸ் யோஜனா மூலம் வீடு கட்டி வழங்கப்படும்.
  • சேதம் அடைந்த நெடுஞ்சாலைகள், பள்ளிகள் மற்றும் நீர்நிலைகள் மீண்டும் அமைக்கப்படும்.
  • விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்.

பிறகு பிரதமர் மோடி பஞ்சாப் புறப்பட்டு, குர்தாஸ்பூரில் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று, பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து ரூ.1,600 கோடி நிதியுதவி அறிவித்தார். பஞ்சாபில் வெள்ளத்தால் இதுவரை 51 பேர் உயிரிழந்தனர்.

இழப்பீடு:

  • உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம்
  • காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம்
Facebook Comments Box