“நியாயத்தோடும், பாரபட்சமின்றியும் செயல்படுங்கள்” – சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை மேற்கோள் காட்டி சி.பி.ஆருக்கு காங்கிரஸ் வாழ்த்து
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் காட்டியபடி, சி.பி. ராதாகிருஷ்ணன் நியாயமானும், சார்பில்லாமலும் செயல்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில் வெளியிட்ட செய்தியில்:
“இந்தியாவின் புதிய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு காங்கிரஸ் கட்சி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இதனுடன், நாட்டின் முதல் குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவையின் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கூறிய அறிவார்ந்த வார்த்தைகளை நினைவுகூருகிறோம்.
1952 மே 16 ஆம் தேதி மாநிலங்களவையின் தொடக்க அமர்வில் அவர் கூறியதாவது:
‘நான் எந்த ஒரு கட்சியையும் சேர்ந்தவன் அல்ல; அதே சமயம், இவ்வவையில் உள்ள ஒவ்வொரு கட்சியையும் சேர்ந்தவன். ஜனநாயக மரபுகளையும், உயர்ந்த தரத்தையும் நிலைநிறுத்துவது என் கடமை. எவரிடமும் பகை இல்லாமல், ஒவ்வொருவரிடமும் நற்பெயருடன், நியாயமாகவும் பாரபட்சமின்றியும் செயல்படுவதே என் முயற்சியாகும்.
எதிர்க்கட்சிகள், அரசின் கொள்கைகளை சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் விமர்சிக்க முடியாத நிலை வந்துவிட்டால், ஜனநாயகம் ஒடுக்குமுறையாக மாறி சீரழியும்.’
டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறிய இவ்வார்த்தைகளை அவர் தனது வாழ்நாளில் முழுமையாக கடைபிடித்தார்” என ஜெயராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.