அரசியலமைப்பைப் பாதுகாக்கும் நோக்கில், ஆளுநர் மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் இருக்கலாம்: மத்திய அரசு தரப்பின் வாதம்
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் மறுக்கும் அதிகாரம் உண்டு என்றும், அது அரசியலமைப்பை காப்பதற்கான நடவடிக்கையாக கருதப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார்.
முன்னதாக, மத்திய மற்றும் மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் போது ஆளுநரும், குடியரசுத் தலைவரும் கால வரையறைக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பல கேள்விகளை எழுப்பியதால், 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்து வருகிறது.
இன்றைய விசாரணையில், பஞ்சாப் சார்பில் அரவிந்த் தத்தார், தெலங்கானா சார்பில் நிரஞ்சன் ரெட்டி, மேகாலயா சார்பில் அட்வகேட் ஜெனரல் அமித் குமார், திமுக சார்பில் பி. வில்சன் மற்றும் மத்திய அரசு சார்பில் துஷார் மேத்தா தத்தமது வாதங்களை முன்வைத்தனர்.
நிரஞ்சன் ரெட்டி, “மாநிலங்களில் பிரிவினைவாதம் அதிகமாக இருந்த காலத்தில் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில் அதனை தொடர்வது, மாநிலங்களின் அதிகாரத்தை குறைப்பதாக இருக்கும்” என்றார்.
பி. வில்சன், “மசோதா என்பது அரசியல் விருப்பத்தின் வெளிப்பாடு. அதைத் தடைசெய்வது அல்லது தீர்ப்பளிப்பது நீதிமன்றத்தின் பணி, ஆளுநரின் பணி அல்ல” என்றார்.
மத்திய அரசு சார்பில் துஷார் மேத்தா, “ஆளுநர் மசோதாவை காலவரையறையின்றி நிலுவையில் வைக்க முடியாது. ஆனால் அரசியலமைப்பின் பிரிவு 200-ன் கீழ், அவருக்கு நான்கு விருப்பங்கள் உள்ளன. அவர் வெறும் ‘தபால்காரர்’ அல்ல; சட்டமன்றத்தின் ஒரு அங்கம். எந்த மசோதாவும் அவர் ஒப்புதல் அளித்த பிறகே சட்டமாகும். அரசியலமைப்பை நிலைநிறுத்தும் பொறுப்பு அவருக்கு உண்டு.
ஆளுநர் சூப்பர் முதல்வர் அல்ல; அமைச்சரவையின் ஆலோசனைக்கு உட்பட்டே செயல்பட வேண்டும். ஆனாலும், சில நேரங்களில் மத்திய அரசின் பிரதிநிதியாகவும், நடுவராகவும் செயல்பட வேண்டிய சூழல் உண்டு. அப்போதெல்லாம் அரசியலமைப்பை காப்பதற்காக மசோதாவுக்கு ஒப்புதல் மறுக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளது.
உதாரணமாக, பஞ்சாப் சட்லஜ்–யமுனா இணைப்பு கால்வாய் நிலம் தொடர்பான 2016 மசோதாவுக்கு அங்குள்ள ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் விட்டார். அந்த மசோதா சட்டமாகியிருந்தால், கூட்டாட்சி முறையே பாதிக்கப்பட்டிருக்கும். எனவே, அரசியல் அழுத்தங்களை மீறியும் அரசியலமைப்பை காக்கும் கடமை ஆளுநருக்கே உண்டு” என்று வாதிட்டார்.
இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை நாளை நடைபெறவுள்ளது.