சமையலர் மீது ரூ.46 கோடி வருமான வரி நோட்டீஸ்
மத்திய பிரதேசம், பிந்த் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையலராக வேலை செய்து வரும் ரவீந்தர் சிங் சவுகான் (30) என்பவருக்கு, கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி வருமான வரித்துறையிலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது.
அவருக்கும், மனைவிக்கும் ஆங்கிலம் தெரியாத காரணத்தால், அந்த நோட்டீஸை கவனிக்காமல் விட்டுவிட்டனர்.
பின்னர், ஜூலை 25-ஆம் தேதி மீண்டும் இரண்டாவது முறையாக நோட்டீஸ் வந்தது. இதையடுத்து, ஆங்கிலம் அறிந்தவரின் உதவியை நாடியபோது, குவாலியர் வருமான வரி அலுவலகத்திலிருந்து வந்த அந்த நோட்டீஸில், 2020–21 நிதியாண்டுக்கான வருமான வரிப் பாக்கி ரூ.46 கோடி செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்து, வழக்கறிஞர் உதவியுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து சவுகானின் வழக்கறிஞர் பிரதுமான் சிங் பதோரியா கூறியதாவது:
“2019-ஆம் ஆண்டு குவாலியர் சுங்கச்சாவடி அருகிலிருந்த ஒரு உணவகத்தில் சவுகான் உதவியாளராக பணியாற்றியுள்ளார். அப்போது அங்கு மேலாளராக இருந்த ஒருவர், பி.எப். கணக்கு தொடங்குவதாகக் கூறி, சவுகானின் வங்கி கணக்கு விவரம், ஆதார் அட்டை விவரம் ஆகியவற்றை பெற்றார்.
அந்த ஆவணங்களை பயன்படுத்தி யாரோ ஒருவர் புதிய வங்கி கணக்கு தொடங்கி, பெரும் அளவில் பண பரிவர்த்தனை செய்திருக்கிறார். இதுகுறித்து நாங்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். இந்த மோசடி டெல்லியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, டெல்லியில் தனியாக புகார் செய்ய வேண்டிய நிலை உள்ளது’’ என்றார்.