“குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலிலும் வாக்கு திருட்டு நடந்தது” – பாஜக மீது காங்கிரஸ் அதிர்ச்சி குற்றச்சாட்டு

சமீபத்தில் நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலிலும் பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக, காங்கிரஸ் எம்.பியும் மக்களவைக் கொறடாவுமான மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

அந்தத் தேர்தலில் மொத்தம் 767 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் 752 வாக்குகள் செல்லுபடியானவை, 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. முடிவில், சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளும், சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளும் பெற்றனர். இதே சமயம், 14 எம்.பிக்கள் – 7 பிஜேடி, 4 பிஆர்எஸ், 1 சிரோமணி அகாலி தளம், 2 சுயேச்சை – வாக்களிக்கவில்லை.

எதிர்க்கட்சிகள் சுதர்சன் ரெட்டிக்கு குறைந்தது 315 வாக்குகள் கிடைக்கும் என நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் 300 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதனால், எதிர்க்கட்சிகள் இடையே ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளன. சில கட்சிகளின் எம்.பிக்கள் வேறுபட்ட விதமாக வாக்களித்திருப்பதோ, அல்லது செல்லாத வாக்குகளைப் பதிவு செய்திருப்பதோ காரணமாக இருக்கலாம் என்று மதிப்பீடு வெளியாகியுள்ளது.

பெயர் வெளிப்படுத்த விரும்பாத ஒரு எதிர்க்கட்சித் தலைவர்,

“சிவசேனா (உத்தவ் அணியின்) 3 வாக்குகள், ஆம் ஆத்மி கட்சியின் 4 வாக்குகள், என்.சி.பி (சரத் பவார் அணியின்) 2 வாக்குகள், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் 1 அல்லது 2 வாக்குகள் சந்தேகத்துக்கிடமாக உள்ளன. அதேபோல், காங்கிரஸ் வாக்கும், சமாஜ்வாதி கட்சியின் 2 வாக்குகளும் கேள்விக்குறியாக உள்ளன” எனக் குறிப்பிட்டார்.

மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில்,

“எதிர்க்கட்சியின் எம்.பிக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்ததற்காக சிவசேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே நன்றி தெரிவிப்பதன் அர்த்தம் என்ன? ‘மனசாட்சி வாக்குகளை’ பெற்றதாகக் கூறி மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கொண்டாடுவதன் நோக்கம் என்ன? இது உண்மையான மனசாட்சியா, அல்லது சிபிஐ, அமலாக்கத்துறை அழுத்தத்தாலும், குதிரை பேரத்தாலும் உருவான மனசாட்சியா?

பாஜக தலைவர்கள் தாமே எதிர்க்கட்சிகளின் வாக்குகள் தங்களுக்கு வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். இது நாடாளுமன்றத்துக்குள்ளேயே நடந்த ‘வாக்கு திருட்டு’ என்பதற்கான சான்றாக இல்லையா? பெங்களூரு மத்திய தொகுதி முதல் இன்றைய துணைத் தலைவர் தேர்தல் வரை, மோடி–அமித்ஷா முறை வாக்கு திருட்டின் மூலமே வெற்றிபெறுகிறார்களா? மக்கள் ஆணையை மதிக்காமல், வாக்குகளை பறிக்கிற அரசியலால் ஜனநாயகம் நிலைத்திருக்குமா? 2029-ல் மக்கள் பதிலளிப்பார்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.

அதேபோல், திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை தலைவரான டெரெக் ஓ’பிரையன்,

“ஒரு சித்தாந்தப் போரில் எண்களுக்கு அதிக முக்கியத்துவமில்லை. ஆனால் சில எண்களை சொல்ல விரும்புகிறேன். மக்களவையில் துணை சபாநாயகர் இல்லாமல் 2,277 நாட்கள் கடந்துவிட்டன. மணிப்பூரில் வன்முறை வெடித்தது முதல் 861 நாட்கள் ஆகின்றன. அமெரிக்கா, இந்தியாவிலிருந்து இறக்குமதி பொருட்களுக்கு 50% வரி விதித்து 14 நாட்கள் ஆகின்றன. ஜே.பி.நட்டா பாஜக தலைவராக 966 நாட்கள் இருக்கிறார். மேற்கு வங்கத்தில் மகாத்மா காந்தி வேலைத் திட்டம் நிறுத்தப்பட்டு 1,281 நாட்கள் ஆகின்றன. பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் கடைசியாக கேள்விக்கு பதிலளித்து 4,116 நாட்கள் ஆகின்றன. எனவே, உண்மையான எண்கள் இவையே முக்கியமானவை” என்றார்.

Facebook Comments Box