ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவின் ரத யாத்திரையை தொடங்கிய கர்நாடக உள்துறை அமைச்சர்: காங்கிரசில் புதிய சர்ச்சை
ஆர்எஸ்எஸ்-இன் மாணவர் பிரிவான ஏபிவிபி நடத்திய ரதயாத்திரையை கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா துவக்கி வைத்தது அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
துமகுரு மாவட்ட திப்தூரில் நடைபெற்ற ராணி அபக்கா சவுதா ரதயாத்திரை மற்றும் ஜோதி ஊர்வலத்தை உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கொடி காட்டி துவக்கினார்.
பாஜக மற்றும் அதன் கொள்கை தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் மீது அடிக்கடி கடுமையாக தாக்குதல் நடத்திவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த அமைச்சர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, காங்கிரஸுக்குள் விமர்சனங்களை தூண்டியுள்ளது.
இதற்கு முன்பு, கடந்த மாதம் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் சட்டமன்றத்தில் ஆர்எஸ்எஸ் கீதம் பாடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுபோல இப்போது பரமேஸ்வராவும் அதே நிலைக்கு ஆளாகியுள்ளார்.
கடலோர கர்நாடகாவை சேர்ந்த ராணி அபக்கா, 16-ம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை எனக் கருதப்படுகிறார். அவரை நினைவுகூரும் வகையில் ஏபிவிபி தொடர்ந்து இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.