குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன் – விழாவில் முன்னாள் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்பு
நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உடல்நிலை காரணமாக கடந்த ஜூலை 21ஆம் தேதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்ததும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் களமிறங்கினார். எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் சார்பில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிட்டார்.
செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், சி.பி. ராதாகிருஷ்ணன் 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கடவுளின் பெயரில் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆங்கிலத்தில் பிரமாணம் செய்து கொண்டு பொறுப்பேற்றார்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, முன்னாள் துணைத் தலைவர்கள் ஜகதீப் தன்கர், வெங்கைய்யா நாயுடு, ஹமீத் அன்சாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.