இந்தியாவில் தயாராகும் போர் விமான என்ஜின்: பிரான்ஸுடன் கூட்டு முயற்சி
இந்தியா, பிரான்ஸ் Safran நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டில் அதிநவீன போர் விமான என்ஜின்களை உருவாக்கும் திட்டத்தில் உள்ளது. இந்த என்ஜின்கள் இந்தியா தயாரிக்கும் 5வது தலைமுறை Advanced Medium Combat Aircraft (AMCA) போர் விமானங்களில் பயன்படுத்தப்படவுள்ளது. இது, இந்தியாவின் போர் விமான என்ஜின் தொழில்நுட்பத்தில் தன்னிறைவை அடைய முயற்சிக்கும் முக்கிய முயற்சியாகும்.
விண்வெளி மற்றும் உயர் துல்லிய தொழில்நுட்பங்களில் முன்னணி இந்தியாவுக்கு போர் விமான என்ஜின் உற்பத்தி திறன் இதுவரை முழுமையாக இல்லை. காவேரி என்ஜின் திட்டத்தின் கீழ், 35 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா உள்நாட்டில் போர் விமான என்ஜினை உருவாக்கும் பணியைத் தொடங்கியது. 1989-ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சரவைக் குழுவின் அங்கீகாரத்துடன், நாட்டின் லைட் காம்பாட் விமானங்கள் (LCA) இயக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
DRDO, 100 கிலோ நியூட்டன் உந்துதலை தரும் லைட் மற்றும் நடுத்தர வகை போர் விமானங்களுக்கு ஏற்ற வகையில் காவேரி என்ஜின்களை வடிவமைத்துள்ளது. ஆனால், முழுமையான செயல்பாட்டுக்கு இன்னும் வரவில்லை. இதனால், தேஜஸ் Mk1 போர்விமானத்தில் GE F404 மற்றும் தேஜஸ் Mk2 போர்விமானங்களில் GE F414 என்ஜின்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. சமீபத்தில், GE Aerospace நிறுவனத்தின் வழங்கல் தாமதம் காரணமாக இந்திய விமானப்படைக்கு தேஜஸ் போர் விமானங்கள் ஒப்படைப்பு தாமதமடைந்தது.
இந்தியாவின் முழு கட்டுப்பாட்டில் போர் விமான திட்டத்தை முன்னெடுக்க, உள்நாட்டிலேயே போர்விமான என்ஜின்களை தயாரிப்பது அவசியமாகி உள்ளது. இதனையடுத்து, இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து காவேரி என்ஜினை உள்நாட்டில் தயாரித்து விநியோகிக்கும் திட்டத்தை முன்னெடுக்கின்றன.
இந்தத் திட்டத்தில் இந்தியாவின் Gas Turbine Research Establishment (GTRE) மற்றும் Safran நிறுவனம் இணைந்து பணியாற்றவுள்ளனர். முழு திட்டம் இந்தியாவின் அறிவுசார் உரிமைகளுக்குட்பட்டதாக நடக்கும். முக்கியமாக, கிரிஸ்டல் பிளேடு (Crystal Blade) தொழில்நுட்பம் உட்பட அனைத்து தொழில்நுட்பங்களும் 100% DRDOக்கு ஒப்படைக்கப்படும்.
இந்த முயற்சியில் 120 கிலோ நியூட்டன் சக்தி கொண்ட போர் விமான என்ஜின்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளன. 12 ஆண்டுக்குள் ஒன்பது முன்மாதிரி போர் விமான என்ஜின்களை உருவாக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. பின்னர், 140 கிலோ நியூட்டன் சக்தி கொண்ட என்ஜின்களை உருவாக்கும் திட்டமும் உள்ளது.
இது இந்தியாவின் 5வது தலைமுறை போர் விமானம், இரட்டை என்ஜின் போர் விமானங்கள் மற்றும் எதிர்கால ட்ரோன்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும். மேலும், இது நாட்டின் பாதுகாப்பு வளமை மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாகும்.