“பிரதமர் மோடி இப்போது மணிப்பூர் செல்வது சரி, ஆனால்…” – ராகுல் காந்தி கருத்து
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி தற்போது மணிப்பூர் செல்வது சரியானது என கூறியுள்ளார்.
குஜராத்தின் ஜூனாகத் நகருக்கு வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்த போது, பிரதமர் மோடி செப்.13 அன்று மணிப்பூர் செல்ல இருப்பதைப் பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார். ராகுல் காந்தி கூறியதாவது: “மணிப்பூரில் பிரச்சினைகள் நீண்டகாலமாகவே உள்ளன. அவர் இப்போது அங்கு செல்வது நல்லது. ஆனால் நாட்டின் மிக முக்கிய பிரச்சினை வாக்கு திருட்டுதான். ஹரியாணா மற்றும் மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் திருடப்பட்டன. இப்போது மக்கள் எல்லா இடங்களிலும் ‘வாக்கு திருட்டு’ பற்றி பேசுகிறார்கள்.”
அதே நேரத்தில், பிரதமர் மோடியின் குறுகிய நேர பயணம் மற்றும் தாமதம் காரணமாக மணிப்பூர் பயணத்தை காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் விமர்சித்தார். அவர் கடந்த 7-ம் தேதி வெளியிட்ட பதிவில் கூறியதாவது:
“பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி மணிப்பூர் செல்ல உள்ளார். இதற்காக சில தலைவர்கள் அவரை புகழ்ந்து வரவேற்றுள்ளனர். ஆனால் அவர் அங்கு வெறும் 3 மணி நேரம் மட்டுமே தங்கி செல்கிறார். இவ்வளவு குறுகிய நேர பயணம் மூலம் அவர் என்ன சாதிக்க விரும்புகிறார்? 29 மாதங்கள் நீடித்த கடுமையான சூழலை அனுபவித்த மணிப்பூர் மக்களுக்கு இது ஒரு அவமானமே. உண்மையில், பிரதமரின் மணிப்பூர் பயணம் ஒரு சாதாரணப் பயணமே அல்ல. இது மணிப்பூர் மக்களிடமுள்ள அவரது அலட்சியத்தையும் உணர்வின்மையையும்தான் காட்டுகிறது.”