மணிப்பூரில் கலவரத்தால் இடம்பெயர்ந்தவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி
மணிப்பூரில் குகி மற்றும் மைத்தி இனக்குழுக்களுக்கு இடையிலான மோதலால் ஏற்பட்ட கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாடுவார் என்று மாநில தலைமைச் செயலாளர் புனீத் குமார் கோயல் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப்.13) மணிப்பூருக்கு வருவதையொட்டி அவரது பயணத் திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புனீத் குமார் கோயல், “நாளை மதியம் 12.30 மணிக்கு பிரதமர் சுராசந்த்பூரில் வருகை தருவார். அங்கு அமைதி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.7,300 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். மேலும், கலவரத்தால் இடம்பெயர்ந்தவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடுவார். இதையடுத்து, இம்பாலுக்கு சென்று காங்லா கோட்டை பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.1,200 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்குவார்” என்று அவர் கூறினார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சுராசந்த்பூர் அமைதி மைதானத்திலும், 237 ஏக்கர் பரப்பளவு கொண்ட காங்லா கோட்டையிலும் மத்திய மற்றும் மாநில படைகள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினர் 24 மணி நேரமும் இப்பகுதிகளில் கண்காணிப்பு நடத்தி வருகின்றனர். மணிப்பூர் பேரிடர் மேலாண்மைப் படையின் படகுகள் மற்றும் கோட்டையைச் சுற்றிய அகழிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.
மணிப்பூரில் குகி மற்றும் மைத்தி இனக்குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் 2023 மே மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 260-க்கும் மேலானோர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட முடியாத நிலையில் முதல்வர் பிரோன் சிங் தனது பதவியை விட்டு வெளியேறினார். பிப்ரவரி மாதம் முதல் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.
மணிப்பூரில் அமைதியை விரைவாக நிலைநாட்ட முடியாததால் எதிர்க்கட்சிகள், பாஜக தலைமையிலான மாநில மற்றும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தனர். கலவரத்துக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது