இன கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு இன்று பிரதமர் மோடி பயணம்

இன கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்ல உள்ளார். அங்கு ரூ.7,300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

2023 மே மாதம், மணிப்பூரில் குகி – மைத்தேயி சமூகங்களுக்கு இடையே மோதல் வெடித்தது. சமதளப் பகுதிகளில் வசிக்கும் மைத்தேயிகள் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை வைத்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைப் பகுதிகளில் வாழும் குகி பழங்குடியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் மோதல் வன்முறையாக மாறி, 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் அண்டை மாநிலங்களுக்கு தஞ்சம் அடைந்தனர்; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.

இரு சமூகங்களின் மூத்த தலைவர்களுடன் மத்திய மற்றும் மாநில அரசுகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது. தற்போது நிலைமை சீராகும் நிலையில் உள்ளது. இந்த சூழலில், இன கலவரத்துக்குப் பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி இன்று மணிப்பூர் செல்வது முக்கியத்துவம் பெறுகிறது.

மாநில தலைமைச் செயலர் புனித் குமார் கோயல் தெரிவித்ததாவது:

மிசோராமில் பைரபி – சாய்ராங் ரயில் பாதை திட்டத்தை இன்று காலை பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன் பின், மதியம் 12.30 மணியளவில் மணிப்பூர் சுராசந்த்பூர் மாவட்டத்துக்கு வருகிறார். அங்கு குகி – மைத்தேயி கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களுடன் சந்தித்து உரையாடுவார்.

பின்னர், ரூ.7,300 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அமைதி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதன் பின், பிற்பகல் 2.30 மணிக்கு தலைநகர் இம்பாலுக்கு சென்று, ரூ.1,200 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமரின் வருகை மணிப்பூரில் அமைதி நிலை உறுதி செய்யவும், வளர்ச்சி வேகமெடுக்கவும் வழிவகுக்கும் என கூறப்பட்டது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மணிப்பூர் செல்லும் பிரதமரின் முடிவு வரவேற்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார். பிரதமரின் பயணத்தை முன்னிட்டு, மணிப்பூர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Facebook Comments Box