சத்குருவின் போலி வீடியோவால் பெண்ணிடம் ரூ.3.75 கோடி மோசடி

பெங்களூரு சி.வி.ராமன் நகரைச் சேர்ந்த 57 வயது பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், “பிப்ரவரி 26-ஆம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஈஷா அறக்கட்டளை தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசுவதைப் போல காணப்பட்ட ஒரு வீடியோவை பார்த்தேன்.

அந்த வீடியோவில், குறிப்பிட்ட பங்குச் சந்தையில் 250 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.22 ஆயிரம்) முதலீடு செய்தால், அதிக வட்டி சேர்த்து 100 நாட்களில் முழு தொகையும் திருப்பித் தரப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

பின்னர் வாலித் என்ற ஒருவர் தொடர்பு கொண்டு, தனது நிறுவனத்தின் வாட்ஸ்அப் குழுவில் என்னை இணைத்தார். பின்னர் ஜூம் வீடியோ வழியாக பங்குச்சந்தை தொடர்பான பயிற்சியையும் வழங்கினர். அதன் அடிப்படையில், இரண்டு தவணைகளாக மொத்தம் ரூ.3 கோடியே 75 லட்சத்து 72 ஆயிரத்து 121-ஐ அந்த நிறுவன வங்கி கணக்கில் முதலீடு செய்தேன். ஆனால், 100 நாட்கள் கடந்தும், எனது முதலீடும் லாபமும் திரும்ப கிடைக்கவில்லை” எனப் புகாரில் கூறியிருந்தார்.

இதையடுத்து, பெங்களூரு கிழக்கு மண்டல குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சத்குருவின் பேச்சு போல காணப்படும் ஏஐ டீப் ஃபேக் (AI Deepfake) வீடியோவை உருவாக்கி மோசடி செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும், இதேபோல் பலரையும் அந்த கும்பல் ஏமாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. முதலீடு செய்யப்பட்ட பணத்தை மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

Facebook Comments Box