உள்நாட்டிலேயே ரஃபேல் தயாரிப்பு – விமானப்படையின் புதிய முன்மொழிவு

இந்திய விமானப்படையின் ஆற்றல் மிகுந்த ஆயுதமாக விளங்கும் ரஃபேல் போர் விமானங்களை இனிமேல் நாட்டுக்குள் தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, ராணுவத்தை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக, விமானப்படையை உலகத் தரத்தில் முன்னேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், அதிநவீன ஜெட் என்ஜின்கள், சுதர்சன் சக்ரவான் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்டவை அதற்கான உதாரணங்களாகும்.

இந்நிலையில், இதுவரை பிரான்ஸிலிருந்து வாங்கப்பட்டு வந்த ரஃபேல் விமானங்களை இனி இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை மத்திய அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ முன்மொழிவை இந்திய விமானப்படை பாதுகாப்புத் துறைக்கு வழங்கியுள்ளது.

🔹 சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் செலவில் 114 ரஃபேல் விமானங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும் எனத் தகவல்.

🔹 இதுவே இந்திய ராணுவ உற்பத்தித் துறையில் இதுவரை உள்ள மிகப்பெரிய திட்டமாகும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

🔹 மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், பிரான்ஸ் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் மற்றும் இந்திய நிறுவனங்கள் இணைந்து பணியாற்றும். இதில் 60% க்கும் மேல் பங்கு இந்தியாவின் உற்பத்தியாக இருக்கும்.

மேலும், ரஃபேல் விமானங்களில் பயன்படுத்தப்படும் M-88 என்ஜின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு நிலையம் ஹைதராபாத்தில் அமைக்கப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ரஃபேல் விமானங்கள் முக்கிய பங்கு வகித்திருந்தன. அதன்பின்னர், அவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது இந்திய விமானப்படையில் 36 ரஃபேல் விமானங்கள் உள்ளன. அண்மையில் கூடுதலாக 26 ரஃபேல் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இனி உள்நாட்டில் மேலும் 114 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டால், மொத்தம் 176 ரஃபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேரும். இது, இந்தியாவின் வான்வழி பாதுகாப்பை அபரிமிதமாக வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments Box