அசாமில் 5.8 ரிக்டர் நிலநடுக்கம் – பூடானிலும் அதிர்வு உணரப்பட்டது
அசாமின் உடல்குரி மாவட்டத்தில் இன்று மாலை 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட தகவலின்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.41 மணியளவில் உடல்குரியில் நிலநடுக்கம் பதிவானது. இதன் மையப்பகுதி உடல்குரி மாவட்டத்தில் அமைந்திருந்தது. நிலநடுக்கத்தின் ஆழம் 5 கிலோமீட்டராக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வடக்கு வங்க மாநிலத்திலும், அண்டை நாடான பூடானிலும் உணரப்பட்டுள்ளது. ஆனால் உயிரிழப்பு அல்லது சொத்து சேதம் குறித்து இதுவரை எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
முன்னதாக, செப்டம்பர் 2ஆம் தேதி அசாமின் சோனித்பூரில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவால் தனது எக்ஸ் பதிவில், “அசாமில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் குறித்து கவலைப்படுகிறேன். மக்களின் பாதுகாப்பிற்கும் நலன்களுக்கும் நான் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.