பதுங்கு குழிகளில் ஒளியும் ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள்
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு உள்ளூர் மக்களின் ஆதரவு குறைந்ததால், அவர்கள் தற்போது காட்டுப் பகுதிகளில் பதுங்கு குழிகளை அமைத்து தஞ்சம் புகுகின்றனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் குல்காம் மலைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பின்னர் நடத்தப்பட்ட சோதனையில், உணவுப் பொருட்கள், சிறிய கேஸ் அடுப்பு, குக்கர், ஆயுதங்கள், வெடிமருந்துகள் அடங்கிய பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னர் மக்கள் வீடுகளில் தங்கி வந்த தீவிரவாதிகள், கடுமையான நடவடிக்கைகள் காரணமாக இப்போது யாரிடமும் ஆதரவு பெற முடியாத நிலையில், குல்காம், சோபியான், பீர் பாஞ்சல், ஜம்மு ஆகிய பகுதிகளில் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் இத்தகைய குழிகளை அமைத்து வருகின்றனர்.
தீவிரவாதிகளை கண்டறிய தரை ஊடுருவும் ரேடார், ட்ரோன், புவி அதிர்வு கருவிகள் போன்ற உயர் தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.