கேரளாவில் அமீபா தொற்று: 18 பேர் பலி – பாதிப்பு 67 ஆக உயர்வு
கேரளாவில் மூளையைத் தாக்கும் ஆபத்தான அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (மூளையை தின்னும் அமீபா நோய்) தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சமீபத்தில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் முந்தைய நாள் நண்பர்களுடன் அக்குளம் பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் நீந்தியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை அந்த நீச்சல் குளத்தை மூடி, நீர் மாதிரிகளை சோதனைக்காக சேகரித்துள்ளது.
செப்டம்பர் 14 அன்று சுகாதாரத்துறை வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட (IDSP) தரவுகளின்படி, இந்த ஆண்டு கேரளாவில் இதுவரை 67 பேருக்கு அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 18 பேர் பலியாகியுள்ளனர்.
இது தொடர்பாக கேரளா சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில்:
“அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸை தடுப்பதற்கு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். பொதுமக்கள் நீர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மாசுபட்ட அல்லது தேங்கிய நீரில் குளிக்கவோ, முகம் கழுவவோ கூடாது. கால்நடைகள் குளிக்கும் நீர்நிலைகளையும் தவிர்க்க வேண்டும். கிணறுகள் அறிவியல் ரீதியாக குளோரினேட் செய்யப்பட வேண்டும். நீர்ப்பூங்கா மற்றும் நீச்சல் குளங்களும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
வீட்டிலுள்ள நீர் சேமிப்பு தொட்டிகள் சுத்தமாக வைக்கப்பட வேண்டும். இந்த அமீபா மூக்குவழியாக மூளைக்குள் நுழைகிறது. எனவே தண்ணீர் மூக்கில் புகாதவாறு அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் எச்சரித்தார்.