டேராடூனில் மேகவெடிப்பு: பாதிப்பு நிலையை முதல்வரிடம் கேட்டறிந்த மோடி, அமித் ஷா

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் இன்று காலை ஏற்பட்ட மேகவெடிப்பால் கனமழை பெய்தது. இதனால் தேவபூமி கல்வி நிறுவனத்தில் படித்து வந்த சுமார் 200 மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கினர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர், அவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.

கனமழையால் பல சாலைகள், வீடுகள் மற்றும் பொதுக்கட்டமைப்புகள் சேதமடைந்தன. இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் தொலைபேசியில் பேசினார். மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த பிரதமர், மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என உறுதி அளித்தார். அதேபோல் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முதல்வரை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தார்.

முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்ட அறிக்கையில், “கனமழை காரணமாக வீடுகள், அரசு கட்டிடங்கள் மற்றும் பல்வேறு சொத்துகள் சேதமடைந்துள்ளன. மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமரும் உள்துறை அமைச்சரும் என்னிடம் தொலைபேசியில் பேசிச் சொந்தமாக கேட்டறிந்தனர். உத்தராகண்டுக்கு மத்திய அரசு உறுதியாக துணை நிற்கும், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்” என தெரிவித்தார்.

டேராடூனில் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேரில் பார்வையிட்டார். சஹஸ்த்ரதாரா, ராய்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அதேவேளையில், ரிஷிகேஷ் அருகே சந்திரபாகா நதி கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளத்தில் சிக்கிய மூவரை மாநில பேரிடர் மீட்புப் படையினர் காப்பாற்றினர். ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box