மதமாற்றத் தடைச் சட்ட வழக்கு – மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்ற நோட்டீஸ்
மதமாற்றத் தடைச் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா மற்றும் சமீபத்தில் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மதமாற்றத் தடைக்கு சட்டம் அமலாகியுள்ளது. இதற்கு எதிராக Citizens for Justice and Peace (CJP) 2020-ல் மனு தாக்கல் செய்தது. இதனுடன் தொடர்புடைய 13 மனுக்களும் இணைக்கப்பட்டுள்ளன.
முதன்மை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரணையில், மூத்த வழக்கறிஞர் சி.யூ.சிங், “இச்சட்டங்கள் மத சுதந்திரத்தை மீறுகின்றன; ‘லவ் ஜிஹாத்’ போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டவை” என்று வாதிட்டார்.
மனுதாரர் பக்கம், ஜாமீன் பெற முடியாத கடுமையான சட்டம் என சுட்டிக்காட்டப்பட்டது. திருமணத்துக்காக மதம் மாறினாலே கூட 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் அளவுக்கு சட்டம் கடுமையாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
இதே நேரத்தில், மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய, “ஏமாற்றும் நோக்கத்துடன் மதமாற்றம் செய்யப்படுவது தடுக்கப்படவேண்டும்” என வலியுறுத்தினார். அதற்கு நீதிபதி கவாய், “ஏமாற்றம் நடந்ததா இல்லையா என்பதை யார் தீர்மானிப்பார்கள்?” என கேள்வி எழுப்பினார். பின்னர் உபாத்யாயவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்றும், 6 வாரங்களுக்கு பிறகு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.