ஆபரேஷன் சிந்தூரில் மசூத் அசாரின் குடும்பம் அழிந்தது – ஜெய்ஷ்-இ-முகம்மது கமாண்டர் உறுதி

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது மசூத் அசாரின் குடும்பம் அழிந்துவிட்டதாக, ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் கமாண்டர் மசூத் இலியாஸ் காஷ்மீரி உறுதிப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் பஹவல்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த தீவிரவாத அமைப்பு, இந்தியாவுக்கு எதிராக நாடாளுமன்றத் தாக்குதல், பதான்கோட், உரி, புல்வாமா உள்ளிட்ட பல தாக்குதல்களை நடத்தியது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் இவ்வமைப்பைத் தடைசெய்துள்ளன. இதன் தலைவராக மவுலானா மசூத் அசார் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகம்மது கமாண்டர் மசூத் இலியாஸ் காஷ்மீரி, பாகிஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சூழ, மேடையில் பேசிய அவர், “இந்திய படைகள் மே 7 அன்று பஹவல்பூரில் நடத்திய தாக்குதலில் மவுலானா மசூத் அசாரின் குடும்பம் அழிக்கப்பட்டது” என உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். இதன் மூலம், இந்திய ராணுவத்தின் தாக்குதல் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன், கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், முஸ்லிம் அல்லாதவர்கள் என உறுதி செய்து வைத்து 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடூரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, மத்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையைத் தொடங்கியது. மே 7 அன்று, பாகிஸ்தானின் பஹவல்பூர், முரிட்கே, கோட்லி உள்ளிட்ட 9 இலக்குகளை இந்திய ராணுவம் குறிவைத்து தாக்கியது. இதில் ஜெய்ஷ்-இ-முகம்மது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளின் தளங்கள் மீது இந்திய விமானப்படை குண்டுகளை வீசியது.

பாகிஸ்தான் ஊடகங்களின் தகவலின்படி, பஹவல்பூரில் நடந்த தாக்குதலில் மசூத் அசாரின் மனைவி உள்பட குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். இப்போது, ஜெய்ஷ்-இ-முகம்மது கமாண்டர் இதனை வெளிப்படையாக உறுதிப்படுத்தியிருப்பது, இந்திய ராணுவத்தின் தாக்குதலின் தீவிரத்தைக் காட்டுகிறது.

Facebook Comments Box