இந்தித் திணிப்புக்கு எதிராக கொல்கத்தாவில் போராட்டம்

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 14-ஆம் தேதி இந்தி தினம் (Hindi Diwas) ஆகக் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வையொட்டி, மத்திய அரசு இந்தித் திணிப்பில் ஈடுபடுகிறது எனக் குற்றம்சாட்டி, கொல்கத்தாவைச் சேர்ந்த பங்களா போக்கோ (Bangla Pokkho) அமைப்பு போராட்டம் நடத்தியது.

பண்பாடு மற்றும் மொழி உரிமைக்காக செயல்படும் இந்த பங்களா போக்கோ அமைப்பின் தலைமையிலேயே இந்த ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. கொல்கத்தாவின் ஜாதவ்பூர் சுலேகா சந்திப்பில் தொடங்கிய பேரணி, கரியாஹட் சந்திப்பு வரை நீடித்தது.

போராட்டக்காரர்கள், “இந்தித் திணிப்பு எதிர்ப்பு”, “மொழி சமத்துவம் வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். பங்களா மொழிக்காக மட்டுமின்றி, அனைத்து இந்தி அல்லாத மொழிகளின் உரிமையையும் காக்கவே இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது என அவர்கள் வலியுறுத்தினர்.

மத்திய அரசின் இந்தி தினக் கொண்டாட்டம் இந்தியாவின் பன்மொழித்தன்மையை பாதிக்கிறது என்றும், அனைத்து இந்திய மொழிகளுக்கும் சமமான அரசியல் அதிகாரம், நிதி ஒதுக்கீடு, அங்கீகாரம், வளர்ச்சிக்கான திட்டங்கள் ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்றும் பங்களா போக்கோ அமைப்பின் பொதுச் செயலாளர் கர்கா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும், முக்கியமான மத்திய அரசுத் தேர்வுகள், அறிவிப்புகள், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் இணையதளங்கள், சேவைகள் ஆகியவை அனைத்தும் இந்தியாவின் பிற அட்டவணை மொழிகளிலும் கிடைக்கப்பட வேண்டும். மொழித் திணிப்பை நிறுத்த வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் முக்கியக் கோரிக்கையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

Facebook Comments Box