75-வது பிறந்தநாள்: பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்ரம்ப் உள்பட உலகத் தலைவர்கள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 75-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், ஆன்மிகத் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிறந்த நாள் முன்னிட்ட தின நள்ளிரவிலேயே தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “எனக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த என் நண்பர் அதிபர் ட்ரம்புக்கு நன்றி. இருதரப்பு உறவை உச்சத்துக்கு கொண்டு செல்வதில் நான் உறுதியாக உள்ளேன். ரஷ்யா–உக்ரைன் போருக்கு அமைதி தீர்வு கிடைக்க வேண்டும் என்ற உங்கள் முயற்சிக்கு எங்கள் ஆதரவு உள்ளது” என்று குறிப்பிட்டார்.

அதிபர் ட்ரம்ப் தனது ‘ட்ரூத்’ சமூக வலைதளத்தில், “என் நண்பர் மோடியுடன் சில நிமிடங்களுக்கு முன் பேசினேன். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தேன். அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ரஷ்யா–உக்ரைன் போரை முடிக்க எனக்கு ஆதரவு அளித்தமைக்கு நன்றி நரேந்திரா” எனப் பதிவு செய்தார்.

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் மோடியுடன் எடுத்துக்கொண்ட செல்பியை பகிர்ந்து, “இந்திய பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவரின் உறுதியான மனவலிமை, தலைமைக் குணம், கோடிக்கணக்கான மக்களை வழிநடத்தும் திறன் ஆகியவை அனைவருக்கும் உத்வேகம் தருகின்றன. அவர் ஆரோக்கியமுடன் இருந்து இந்தியாவை பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிநடத்த வேண்டும். இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடைய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது வாழ்த்துச் செய்தியில், “அன்புத் தோழர் மோடி, உங்கள் பிறந்த நாளில் இதயம் கனிந்த நல் வாழ்த்துகள். நம் இரு நாடுகளின் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மையை ஏற்படுத்தும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படவும் நீங்கள் தனிப்பட்ட முறையில் ஆற்றும் பங்கு முக்கியமானது” எனக் கூறியுள்ளார்.

அதேபோல், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லுக்சன், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தலாய் லாமா, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Facebook Comments Box