மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனிமேல் வேட்பாளர் வண்ணப் புகைப்படம்
வாக்காளர்கள் எளிதாக அடையாளம் காண வசதியாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனிமேல் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படம் இடம்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக இம்முறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலை நியாயமான முறையில், நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
மேலும், தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப தேர்தல் நடைமுறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதில், வாக்குச் சீட்டிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (இவிஎம்) பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் வாக்குப்பதிவு நேரம் மற்றும் வாக்கு எண்ணும் நேரம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர நடைமுறையில் பல குறைகளை எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக, எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் ஒரே சின்னத்தில் வாக்குகள் பதிவாகும் வகையில் இவிஎம் இயந்திரத்தில் மாற்றம் செய்ய முடியும் என்று குறைகூறினர். தேர்தல் ஆணையம் இதை மறுத்துள்ளது.
அதன்பிறகு, யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளும் வி.வி.பாட் கருவி (VVPAT) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டது. அதில் வாக்களித்த சின்னம் அச்சிடப்பட்ட சீட்டை பார்க்க முடியும். ஆனால், அந்த சீட்டை வாக்காளர் எடுத்துச் செல்ல முடியாது.
இந்நிலையில், பிஹாரில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது. இதற்காக காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
குறிப்பாக, பாஜகவும், தேர்தல் ஆணையமும் சேர்ந்து வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்கிறது.
எஸ்ஐஆர் பணியின் போது 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். பக்கத்து நாட்டில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள், வெளியூரில் நிரந்தரமாக தங்கியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதை ஏற்கவில்லை.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இதற்கிடையில், இவிஎம் மீது ஒட்டப்படும் வேட்பாளர் விவரங்கள் தொடர்பாக திருத்தப்பட்ட விதிமுறைகள் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டது: தேர்தல் செயல்முறைகளை எளிதாக்கவும், மேம்படுத்தவும், வாக்காளர்களுக்கான வசதிகளை அதிகரிக்கவும், கடந்த 6 மாதங்களில் தேர்தல் ஆணையம் 28 முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (இவிஎம்) ஒட்டப்படும் வாக்குச் சீட்டுகளை வடிவமைத்து அச்சிடும் விதிகள், தேர்தல் நடத்தை விதிகள் 1961-ன் 49(பி) பிரிவின் கீழ் திருத்தப்பட்டுள்ளன.
அதன்படி, இவிஎம் மீது ஒட்டப்படும் தாள் இளஞ்சிவப்பு வண்ணத்தில், 70 ஜிஎஸ்எம் தடிமனுடன் இருக்க வேண்டும். அதில் வேட்பாளர்களின் புகைப்படம் வாக்காளர்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில் வண்ணத்தில் இருக்க வேண்டும். முகம் புகைப்படத்தின் 4/3 அளவில் தெளிவாக இருக்க வேண்டும்.
மேலும், நோட்டா, வேட்பாளர்களின் வரிசை எண் மற்றும் பெயர் ஒரே எழுத்து வடிவில் (ஃபான்ட்) பெரிய எழுத்தில் (30 புள்ளிகள்) எழுத்திடப்பட வேண்டும். இந்த புதிய நடைமுறை வரும் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக அமல்படுத்தப்படும்.