ஆயுதப் போர் நிறுத்தத் தயாரா: அமைதி கலந்துரையாடலுக்குத் மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம்
“ஒரு மாத காலத்திற்கு போராட்டத்தை நிறுத்துகிறோம். அந்தக் காலத்தில் அமைதி கலந்துரையாடல் நடத்தி சுமூகமான முடிவு எடுக்கலாம்” என்று மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற சில மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வரும் 2026 மார்ச் மாதத்துக்குள் நாட்டிலிருந்து மாவோயிஸ்ட்கள் முழுமையாக அழிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியாக கூறியுள்ளார். அதன்படி, உள்ளூர் போலீஸார், கோப்ரா படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் என பெரிய படையணி மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மத்திய மாவோயிஸ்ட் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அப்ஹே என்பவர், மத்திய அரசுக்கு கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதம் தற்போது ஊடகங்களில் வெளியானது.
அந்தக் கடிதத்தில் அப்ஹே குறிப்பிட்டதாவது: “எங்கள் ஆயுதப் போராட்டத்தை ஒரு மாதத்திற்கு நிறுத்துகிறோம். அந்தக் காலத்தில் அரசு நியமிக்கும் குழுவினருடன் அமைதி கலந்துரையாடல் நடத்தி நல்ல முடிவு காணலாம்.
மேலும், சிறையில் உள்ள மாவோயிஸ்ட் தலைவர்கள் இந்த உரையாடலில் பங்கேற்க அனுமதி பெற வேண்டும். அந்தக் காலத்தில் போலீஸாரின் தொந்தரவு இருக்கக் கூடாது. என்கவுண்டர் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். அதோடு, அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். இந்த உரையாடல் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், கடிதத்துக்கு பதில் அளிக்க வசதியாக மின்னஞ்சல் முகவரியையும் அப்ஹே இணைத்துள்ளார். சத்தீஸ்கர் அதிகாரிகள் கூறுகையில், “மாவோயிஸ்ட்கள் பலர் கொல்லப்பட்டதால் அந்த அமைப்பு தற்போது பலவீனமடைந்துள்ளது.
எனவே, மாவோயிஸ்ட் அமைப்பினரை மீண்டும் ஒன்று சேர்த்து திட்டமிடுவதற்கும் சூழ்ச்சி செய்வதற்கும், அமைதி பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாடகமாடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இருந்தாலும், அந்தக் கடிதம் உண்மையானதாக இருந்தால், மிகப்பெரிய மாற்றம் நிகழும்” என்றனர்.
மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்ததாவது: “மாவோயிஸ்ட்கள் அமைதி பேச்சுக்குத் தயாராகும் நிலை வரவேற்கத்தக்கது. இந்த உரையாடலில் மனித உரிமை ஆர்வலர்கள், சமூகப் பணியாளர்களை மத்தியஸ்தர்களாகச் செயல்படுத்தலாம். எனினும், 2026 மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் மாவோயிஸ்ட்களும் நக்சல்களும் அழிக்கப்படுவார்கள் என்ற மத்திய அரசின் உறுதிமொழியில் எந்த மாற்றமும் இல்லை” என்றனர்.