ஆபரேஷன் சிந்தூர் – மூன்றாம் தரப்பு தலையீட்டை இந்தியா மறுத்துவிட்டது: பாகிஸ்தான் துணை பிரதமர்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியா–பாகிஸ்தான் இடையிலான பிரச்சினைகளை தீர்க்க மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்கவில்லை என்று பாகிஸ்தான் அங்கீகரித்துள்ளது.

பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் தாரிடம், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பு மற்றும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் குறித்த பாகிஸ்தானின் நிலைப்பாடு பற்றி தோஹாவில் அல் ஜசீரா ஊடகம் கேள்வி எழுப்பியது.

இதற்கு அவர் பதிலளித்ததில்,

“இதற்கு எங்களிடம் எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால், இந்தியா இதை முழுமையாக இருதரப்பு பிரச்சினை என்றே கருதி, மூன்றாம் தரப்பின் பங்கையும் தலையீட்டையும் தெளிவாக மறுத்துவிட்டது.

கடந்த ஜூலை மாதம் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவை சந்தித்தபோதும், நான் இந்தியாவுடன் உரையாடல் குறித்து பேசியேன். ஆனால் ரூபியோவும், இது இரு நாடுகளுக்குள் உள்ள பிரச்சினை என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு என்று தெரிவித்தார். எனவே, எந்தவித மத்தியஸ்தத்தையும் இந்தியா முழுமையாக நிராகரித்துவிட்டது” என அவர் கூறினார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்:

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தனது எக்ஸ் பதிவில்,

“ஆபரேஷன் சிந்தூர் காலத்தில் மூன்றாம் தரப்பு தலையீட்டை இந்தியா மறுத்துவிட்டது என்பதை பாகிஸ்தான் இப்போது ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் அதற்கெதிராக இந்தியாவின் மதிப்பை குறைக்கும் விதத்தில் பிரச்சாரம் செய்தவர்கள், இப்போது மன்னிப்பு கேட்பார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

Facebook Comments Box