ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை – தேர்தல் ஆணையம் விளக்கம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும் எந்தவித ஆதாரமும் இல்லாதவை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவர் குற்றம் சாட்டியபடி, ஆன்லைன் முறையில் வாக்காளர் பெயரை யாரும் நீக்க முடியாது எனவும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் ஆணையம் கூறியதாவது:

“ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் தவறானவை. எவரும் வாக்காளர் பெயரை ஆன்லைனில் தனிப்பட்ட முறையில் நீக்க முடியாது. உரிய நடைமுறைகளையும், பாதிக்கப்பட்டவரின் விளக்கத்தையும் கேட்காமல் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் அகற்ற முடியாது.

2023-ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் ஆலந்த் தொகுதியில் வாக்காளர்களை சட்டவிரோதமாக நீக்க முயற்சித்த சம்பவம் நடந்தது. ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. இதுகுறித்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது தேர்தல் ஆணையமே. ஆவணங்களின் படி, 2018 தேர்தலில் பாஜகவின் சுபாஷ் குட்டேதர் வெற்றி பெற்றார்; 2023 தேர்தலில் காங்கிரஸின் பி.ஆர். பாட்டீல் வெற்றி பெற்றார்.” என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னர், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் மோசடியாக நீக்கப்பட்டுள்ளன. இது சீரற்ற செயல் அல்ல; திட்டமிட்ட நடவடிக்கை. மென்பொருள் மற்றும் மொபைல் போன்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு ஒருங்கிணைந்த முறையில் இந்த செயல்முறை நடத்தப்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் வலுவாக உள்ள பகுதிகளை குறிவைத்து பெயர்கள் அகற்றப்பட்டுள்ளன. இது ஜனநாயகத்திற்கு கேடு விளைவிக்கும் செயல்” என்று குற்றம் சாட்டினார்.

அதேவேளை, தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்து, “ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்” எனத் தெரிவித்துள்ளது.

Facebook Comments Box