கஜுராஹோ கோயில் வழக்கு: சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் – தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் விளக்கம்
கஜுராஹோ கோயிலுடன் தொடர்புடைய வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்த கருத்து சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, “எல்லா மதங்களையும் மதிக்கிறேன்” என்று அவர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய பிரதேசம், கஜுராஹோவில் உள்ள ஜவாரி கோயிலில் 7 அடி உயர விஷ்ணு சிலை சேதமடைந்துள்ளதாக கூறி, அதைச் சீரமைக்க உத்தரவிட வேண்டும் என ராகேஷ் தலால் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை கடந்த 16-ஆம் தேதி தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி அமர்வு விசாரித்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சஞ்சய் எம். நூலி, “சுதந்திரம் அடைந்த பின்பும் சிலையை சீரமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது கோயில் இந்திய தொல்லியல் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே சீரமைப்பு நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, “சுயவிளம்பர நோக்கத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் விஷ்ணுவின் பக்தர் என்றால் நேரடியாக சென்று பிரார்த்தனை செய்யுங்கள். கோயில் ஏஎஸ்ஐ கட்டுப்பாட்டில் இருப்பதால், மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.
இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை கிளப்பியது. “மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான பேச்சு” என விமர்சிக்கப்பட்டது. பல வழக்கறிஞர்கள் கூட, ‘இந்த கருத்தை திரும்பப் பெற வேண்டும்’ என்று கடிதம் எழுதியுள்ளனர். மதத் தலைவர்களும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழலில், இன்று மீண்டும் விளக்கம் அளித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “சம்பந்தப்பட்ட கோயில் ஏஎஸ்ஐ கட்டுப்பாட்டில் இருப்பதால் அப்படி உத்தரவு வழங்கப்பட்டது. இப்போது சமூக வலைதளங்களில் தவறாக புரிந்து பேசப்படுகிறது. நான் அனைத்து மதங்களையும் நம்புகிறேன், மதிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.