ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில், ஆன்லைன் மோசடிகள் மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்கள் பெயர் நீக்கப்படுகின்றனர் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டினார். மேலும், இதற்குப் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்கள் மற்றும் ஓடிபி விவரங்களை ஒரு வாரத்துக்குள் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு அவர் நேரக்கெடு வைத்துள்ளார்.

பிஹாரில் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டது. அதில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன. இந்த நடவடிக்கைக்கு பாஜகவும், தேர்தல் ஆணையமும் கூட்டுச் சதி செய்துள்ளதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

வாக்கு திருட்டு 2.0 குறித்த ஆதாரங்களை இன்று வெளியிடுகிறேன். கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் மட்டும் 6,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ‘கோதாபாய்’ என்ற பெண்ணின் பெயரில் போலி லாகின் ஐடி உருவாக்கி, அவர் அறியாமல் 12 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல ‘சூர்யகாந்த்’ என்ற பெயரில் 14 நிமிடங்களில் 12 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், அதிகாலை 4.07 மணிக்கு ‘நாகராஜ்’ என்ற பெயரில் 38 விநாடிகளில் 2 பேர் நீக்கப்பட்டதாக பதிவுகள் காட்டுகின்றன. இது தனிப்பட்ட முறையில் சாத்தியமற்றது. கால் சென்டர் மென்பொருள் மூலம் கூட்டாக இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளது. ஒரே செல்போன் எண்கள் பல மாநிலங்களில் வாக்காளர் சேர்க்கை மற்றும் நீக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதன் பின்னணியில் உள்ளவர்களை தலைமை தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார். எனவே, கடந்த 18 மாதங்களாக கர்நாடக சிஐடி அனுப்பிய கடிதங்களுக்கு பதில் அளிக்காமல் தவிர்க்கப்பட்ட செல்போன் எண்கள், ஓடிபி விவரங்களை தேர்தல் ஆணையம் ஒரு வாரத்திற்குள் வெளியிட வேண்டும். இல்லையெனில், இந்த வாக்கு திருட்டில் ஆணையம் நேரடியாக ஈடுபட்டிருப்பது உறுதி” என ராகுல் காந்தி தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் பதில்

இதை தேர்தல் ஆணையம் முற்றிலும் மறுத்துள்ளது. “ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க ஆன்லைனில் சாத்தியமில்லை. 2023-ல் ஆலந்த் தொகுதியில் சில முயற்சிகள் நடந்தன, ஆனால் அவை தோல்வியடைந்தன. அந்த விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளது.

அனுராக் தாக்கூரின் விமர்சனம்

முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “ராகுல் காந்தி தொடர்ச்சியாக அரசியல்சாசன அமைப்புகளை குற்றம் சாட்டுவது, அவருக்கும் காங்கிரசுக்கும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாததையே காட்டுகிறது. அவர் கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் நீதிமன்றம் செல்லலாம். அவர் சுட்டிக்காட்டிய தொகுதியிலேயே காங்கிரஸ் வேட்பாளர் வென்றுள்ளார். வாக்கு திருட்டு நடந்திருந்தால் அது சாத்தியமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

Facebook Comments Box