உ.பி.யில் கோயில் கட்டுமானத்தின் போது ஆங்கிலேய ஆட்சிக் கால நாணயங்கள் கண்டுபிடிப்பு
உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ லோதேஷ்வர் மகாதேவ தாம் கோயிலில் நடைபாதை கட்டுமானப் பணிகள் நடைபெறும் வேளையில், 1882-ம் ஆண்டைச் சேர்ந்த ஆங்கிலேய ஆட்சிக் கால வெள்ளி நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
அஸ்திவாரம் தோண்டும்போது, கட்டுமானத் தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்ட வெள்ளி நாணயங்கள் அடங்கிய களிமண் பானையை முதலில் கண்டனர். பின்னர் அந்த நாணயங்களை தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். உடனே உள்ளூர்வாசிகள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
விரைவாக சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறை அதிகாரிகளும், காவல்துறையினரும், அங்கிருந்த நாணயங்களை கைப்பற்றினர். தற்போது வரை 75 வெள்ளி நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன; மீதமுள்ளவற்றைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இணை நீதிபதி குஜிதா அகர்வால் தெரிவித்ததாவது:
“இந்த நாணயங்கள் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ளது. இதுவரை 75 நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தொல்பொருள் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, தற்போது தொல்லியல் குழு கோயிலில் விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகிறது.”
நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு பொதுமக்கள் நுழைவு தடை செய்யப்பட்டுள்ளது. சுமார் 140 ஆண்டுகள் பழமையான இந்நாணயங்கள் முக்கியமான வரலாற்றுச் சான்றாக கருதப்படுவதாக தொல்லியல் நிபுணர்கள் கூறினர்.