ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும்: பிரதமர் மோடி
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஏற்கனவே அறிவித்தபடி, மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் அவர் உரையாற்றினார்.
அப்போது பிரதமர் கூறியதாவது:
“நாளை முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன. இதன் மூலம் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும். அவர்கள் விரும்பிய பொருட்களை வாங்க முடியும். ஜிஎஸ்டி குறைப்பால் கோடிக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த பொருட்களை குறைந்த விலையில் பெற முடியும். இதனால் அனைத்து மாநிலங்களும் முன்னேற்றம் காணும்.
சரக்கு போக்குவரத்தில் இருந்த தடைகளை அகற்றவே ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டிக்கு முன்பு வரி விதிப்பு சிக்கலானதாக இருந்தது. ஜிஎஸ்டி அமலாக்கம் இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தம். இதன் மூலம் ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற கோடிக்கணக்கானோரின் கனவு நனவானது.
இப்போது அமலுக்கு வரும் ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும். இது இந்திய பொருளாதாரத்தின் புதிய யுகத்தை ஆரம்பிக்கும். இனி ஜிஎஸ்டியில் 5% மற்றும் 18% என்ற இரண்டு விகிதங்கள் மட்டுமே இருக்கும். இதனால் உணவு, மருந்து, வீட்டு உபயோகப் பொருட்களின் விலை குறையும். கார், ஸ்கூட்டர் வாங்குவதும் எளிதாகும். நடுத்தர மக்கள் தங்கள் இலக்குகளை எளிதில் நிறைவேற்ற முடியும். அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும்.
வருமான வரியிலும், ஜிஎஸ்டியிலும் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. 25 கோடி மக்களை ஏழ்மையிலிருந்து மீட்டுள்ளோம்.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் ஏழைகள் புதிய நடுத்தர வர்க்கமாக உயரலாம். சிறு, குறு தொழில்கள் பெரிய அளவில் பயன் அடைவார்கள். சிறு கடைக்காரர்கூட பலனடைவார். வருமான வரிச் சலுகை, ஜிஎஸ்டி குறைப்பு ஆகியவற்றால் மக்கள் மொத்தம் 2.5 லட்சம் கோடி ரூபாய் வரை செலவுகளைச் சேமித்துள்ளனர். இந்த சலுகைகளை நுகர்வோருக்கு கொண்டு செல்ல வியாபாரிகளும் ஆர்வமாக உள்ளனர்.
பொருட்களை அதிகளவில் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும். அவை உலக தரத்தில் இருக்க வேண்டும். இந்தியர்களே இந்திய தயாரிப்புகளைப் பயன்படுத்தும் நிலை வர வேண்டும். அப்போதுதான் ‘சுய சார்பு இந்தியா’ இலக்கை அடைய முடியும்.” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.