விகாஸ் மித்ராக்கள் ‘டேப்லட்’ வாங்க ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் மற்றும் பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் நேற்று கூறியதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான அரசின் நலத்திட்டங்கள் கிராம மக்களைச் சென்றடைய உறுதுணையாக இருக்கும் விகாஸ் மித்ராக்களுக்கு கையடக்க கணினி (டேப்லட்) வாங்க ஒரு முறை நிதியுதவியாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளர் விவரங்களை சேமித்து வைக்கவும், பணியை திறம்பட செய்யவும் டேப்லட் உதவியாக இருக்கும். இதன்மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடைவர்.
மேலும், மாதாந்திர போக்குவரத்து படி ரூ.1,900-ல் இருந்து ரூ.2,500 ஆகவும், எழுதுபொருள் படி ரூ.900-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். மகாதலித், சிறுபான்மையினர் மற்றும் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு முறையான பள்ளிக் கல்வியை கற்பிக்கும் கல்வி உதவியாளர்கள் (சிக் ஷாசேவக்ஸ்) மற்றும் கல்வி கற்றல் மையங்கள் (தலிமி மர்க்கஸ்) ஸ்மார்ட்போன்கள் வாங்குவதற்காக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.