பாடகர் ஜுபின் கார்க்கு நினைவிடம்: அசாம் அரசு அறிவிப்பு

பிரபல பாடகர் ஜுபின் கார்க் மறைவையடுத்து, அசாம் அரசு இரண்டு இடங்களில் அவரது நினைவிடம் அமைக்க முடிவு செய்துள்ளது.

கவுஹாத்தியில் உள்ள அர்ஜுன் போகேஸ்வர் பருவா விளையாட்டு மையத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு அவரது உடல் இறுதி சடங்கிற்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படும்.

இறுதி சடங்கு, அசாம் மாநில சோனாப்பூர் வட்டத்தில் உள்ள காமர்குசி என்சி கிராமத்தில் நடைபெற உள்ளது. அங்கு முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பார்வையிட்டார். மக்களின் கோரிக்கையை ஏற்று, ஜுபின் கார்கின் உடல் மீண்டும் ஒருமுறை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாளைய தினம் காமரூப் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அமைச்சர் அதுல் போரா, “சுமார் 6 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நினைவிடம் அமைக்கப்படும். குடும்பமும் ஒப்புக்கொண்டுள்ளது. ஜுபின் மக்களின் அன்பைப் பெற்றவர் என்பதற்கான சான்றிதான் இந்த அஞ்சலி” என கூறினார்.

அவரது இறுதி ஊர்வலத்தில் தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. ஆம்புலன்ஸில் மனைவி உடன் பயணிக்கிறார்; உறவினர்கள் பேருந்து மூலம் தகன இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுவர். மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இறுதி சடங்கில் பங்கேற்கிறார்.

ஜுபின் கார்க்கின் உடலை அசாம் போலீஸார் சுமந்து தகன மேடைக்கு அழைத்துச் செல்வார்கள். அரசு மரியாதை அளிக்கப்பட்ட பின் தகனம் நடைபெறும். இதற்காக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அண்டை மாநில மேகாலயாவில் உள்ள மதுபானக் கடைகள் நாளை மூடப்படுகின்றன.

52 வயதான ஜுபின் கார்க், அசாம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பாடல்கள் பாடிய பிரபல பாடகர். தமிழில் “அசானா அசானா” (குத்து), “கண்கள் என் கண்களோ” (உற்சாகம்) உள்ளிட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த வடகிழக்கு விழா இசை நிகழ்ச்சிக்காக சென்றபோது ஸ்கூபா டைவிங் சாகசத்தில் ஈடுபட்டபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது திடீர் மறைவு அசாம் மாநிலத்தையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மாநில அரசு 3 நாள் அரசு துக்கம் அனுஷ்டித்து வருகிறது.

Facebook Comments Box