அமித் ஷா குரலில் பேசி முன்னாள் வங்கி ஊழியரிடம் ரூ.4 கோடி மோசடி: உறவினர் 5 பேர் மீது மகாராஷ்டிர போலீஸார் வழக்குப் பதிவு

முன்னாள் வங்கி ஊழியரை, அவரது உறவினர் ஏமாற்றி ரூ.4 கோடி மோசடி செய்துள்ளார். இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரின் குரலில் மர்ம நபர்களையும் கான்பரன்ஸ் அழைப்பில் பேசவைத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த முன்னாள் வங்கி ஊழியர் சூர்யகாந்த் தோரட்(53). இவரை, அவரது உறவினர் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு தொடர்பு கொண்டு, தனது மகன் உளவுத்துறையில் பணியாற்றுவதாக கூறியுள்ளார். அத்துறையின் சிறப்பு திட்டத்தில் முக்கிய பங்காற்றியதால் தனது மகனுக்கு மத்திய அரசு ரூ.38 கோடி பரிசளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த பரிசை பெறுவதற்கு செயல்முறை கட்டணம், வழக்கறிஞர் கட்டணம், மூத்த அதிகாரிகளுக்கு பரிசு வழங்குவதற்காக தனக்கு பணம் தேவைப்படுவதாக சூர்யகாந்திடம் கூறியுள்ளார். இவரை நம்ப வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரின் குரலில் பிற நபர்களை கான்பரன்ஸ் அழைப்பிலும் பேசவைத்துள்ளார். பரிசு பணம் கிடைத்தவுடன் வாங்கும் பணத்தை திருப்பி தருவதாக சூர்யகாந்திடம் உறவினர் கூறியுள்ளார்.

இதை நம்பி கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை தனது உறவினரின் பல வங்கி கணக்குகளில் சூர்யகாந்த் ரூ.4 கோடி-க்கு மேல் பணம் அனுப்பியுள்ளார். தனது சேமிப்பு பணத்தை மட்டும் கொடுக்காமல், தனது சொத்துக்களையும் விற்றும் பணம் வழங்கியுள்ளார். உறவினரிடம் சூர்யகாந்த் பணத்தை திருப்பி கேட்டபோது, மகன் சிறப்பு பணிக்காக வெளிநாடு சென்றிருப்பதாக கூறியுள்ளார். உறவினர் தன்னை ஏமாற்றுவதை உணர்ந்த சூர்யகாந்த் இது குறித்து போலீஸில் புகார் அளித்தார்.

இது குறித்து சூர்யகாந்த கூறுகையில், உறவினரே முதுகில் குத்துவார் என எதிர்பார்க்கவில்லை. மகனின் ஐ.டி.கார்டு, ரிவால்வர், வங்கியிலிருந்து வந்ததாக அனுப்பிய தகவல் ஆகியவற்றை அனுப்பியும், அமித் ஷா, அஜித் தோவல் போன்ற பிறரை கான்பரன்ஸ் அழைப்பில் பேசவைத்தும் என்னை நம்ப வைத்து விட்டார்’’ என்றார்.

இந்த மோசடி தொடர்பாக மகாராஷ்டிரா பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Facebook Comments Box