துபாயில் 13,000 அடி உயரத்தில் இருந்து குதித்து 70 வயது இந்திய மூதாட்டி சாதனை
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கொன்னத்தடியைச் சேர்ந்தவர் லீலா ஜோஸ். இவருக்கு வயது 70. அண்மையில் துபாய்க்கு சென்றிருந்த அவர் 13,000 அடி உயரத்திலிருந்து ஸ்கைடைவிங் செய்தார். இந்தியாவிலிருந்து 70 வயது மூதாட்டி ஒருவர் இவ்வளவு உயரத்திலிருந்து குதித்து சாதனை படைத்தது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கல்ப் நியூஸுக்கு லீலா ஜோஸ் அளித்த நேர் காணலில் கூறியதாவது: எனது மகன் அனீஸ் பி ஜோஸைப் பார்க்க கடந்த மாதம் துபாய்க்கு வருகை தந்தேன். அப்போது அவனிடம் ஸ்கைடைவிங் குறித்த ஆசையை வெளிப்படுத்தினேன். எனது நண்பர்களும் இந்த வயதில் இது முடியாத காரியம் என்று எனது கனவுக்கு தடை போட்டனர்.
இருப்பினும், எனது மகன் நான் அந்த விஷயத்தில் தீவிரமாக இருப்பதை உணர்ந்து அதற்கான ஏற்பாடுகளை செய்தான். துபாயில் உள்ள ஸ்கைடைவிங் குழுவை அணுகி 13,000 அடி உயரத்தில் இருந்து குதிப்பதற்கு ஏற்பாடு செய்தான். அந்த நாளை மட்டும் என்னால் மறக்க முடியாது.
மேலிருந்து பார்க்கும்போது துபாய் நிலப்பரப்பு முழுவதும் தெரிந்தது. கடலைப் பார்க்கும்போது ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் கடலில் குதித்து தப்பிவிடலாம் என்று நினைத்தேன். ஏனெனில் எனக்கு நன்றாக நீச்சல் தெரியும். அது ஒரு அழகான தருணம். நம்பமுடியாத அனுபவம்.
13,000 அடி உயரத்தில் இருந்து குதித்த சாதனைக்கு எனது கணவர் வழங்கிய ஊக்கம் தான் மிக முக்கிய காரணம் புதிய விஷயங்களை ஆராயும் எனது ஆர்வத்தை அவர் எப்போதும் ஆதரிப்பார். தடை போட மாட்டார். இது எனது முதல் சாகசம் கிடையாது. நான் ஏற்கெனவே வயநாட்டில் ஸிப்லைனிலும், புஜைராவில் பாராகிளைடிங்கிலும் பறந்து சாகசம் செய்துள்ளேன்.
எனக்கு இரண்டு மகன்கள். இரண்டு பேரன்கள். எனது வாழ்க்கையை பேசும் என்ற அளவுக்கு வாழ்ந்துவிட்டேன். இனி இருக்கும் காலம் எல்லாம் போனஸ்தான். என் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டிய நேரம் இது. பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. விண்வெளிக்கு செல்லவும் நான் தயாராக உள்ளேன். ஏன் கூடாது?. கனவு காண்பதற்கு வயது தடை இல்லை. இவ்வாறு லீலா ஜோஸ் கூறினார்.