ஆஸம் கானை ஓரங்கட்டுகிறாரா அகிலேஷ்? – சமாஜ்வாதி கட்சிக்குள் புறப்பட்ட புதிய சர்ச்சை!

பல்வேறு வழக்குகளில் சிக்கிய ஆஸம் கான் 23 மாத சிறைக்கு பின் ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். இவரை வரவேற்க சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் செல்லாததால் உத்தரப்பிரதேச அரசியலில் சர்ச்சை கிளம்பியுள்ளது.

கடந்த 2017-ல் பாஜக ஆட்சிக்கு வரும் வரை உ.பி அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர் ஆஸம்கான். சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங்கின் வலதுகரமான இவர், உ.பி முஸ்லிம்களின் முகமாக கட்சியில் இருந்தார். ஆஸம்கான் அனுமதி இன்றி கட்சியில் எந்த மாற்றமும் வராத சூழல் இருந்தது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவால், ஆஸம் கான் மீது ஒன்றன் பின் ஒன்றாக நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின. இதன் காரணமாக அவர் முதலில் 27 மாதங்கள் சிறையில் இருந்தார். பிறகு மீண்டும் கைதாகி 23 மாதங்களுக்கு பின் அவர் செவ்வாய் கிழமை சீதாபூர் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையானார்.

அப்போது ஆஸமின் ஆதரவாளர்கள் திரளாக வந்திருந்து அவரை ராம்பூருக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ஆனால், அவரது கட்சியின் தலைவர் அகிலேஷ், அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியின் முக்கியத் தலைவர்கள் எவரும் ஆஸமை வரவேற்க வரவில்லை.

அதேசமயம், அகிலேஷ் 88 கி.மீ தொலைவிலுள்ள லக்னோவில் ஒரு துணிக்கடை திறப்பு விழாவில் இருந்துள்ளார். இதனால், சமாஜ்வாதியை விட்டு விலகுகிறாரா ஆஸம்? என அரசியல் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

இது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு ஆஸம் பதில் கூறுகையில், “நான் பெரிய தலைவர் இல்லை. நான் ஒரு பெரிய தலைவராக இருந்தால், வேறு யாராவது பெரிய தலைவர் என்னை வரவேற்க வந்திருப்பார்கள்.

பெரிய மனிதர்கள் பெரிய மனிதர்களை வரவேற்க வருகிறார்கள், ஆனால் சிறிய மனிதர்களை வரவேற்க யார் வருகிறார்கள்?” எனப் பதிலளித்துள்ளார்.

இந்த சர்ச்சையால், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் ஆஸம் சேருவார் எனக் கணிப்புகள் கிளம்பியுள்ளன. ஆனால், ராம்பூர் தொகுதியை தன் கோட்டையாக வைத்திருந்த அவரது மனைவியும், மகனும் இன்னமும் சமாஜ்வாதி கட்சியில்தான் உள்ளனர்.

இது குறித்து அகிலேஷ் வெளியிட்ட தனது அறிக்கையில், ‘ஆஸம்கான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். நீதிமன்றம் நிச்சயமாக நீதி வழங்கும் என்று சோசலிஸ்டுகளாகிய நாங்கள் நம்புகிறோம். எதிர்காலத்தில், பாஜகவால் பொய் வழக்குகள் உள்ளிட்ட எந்த அநீதியும் ஏற்படாது என நம்புகிறோம். சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைத்தால், ஆஸம்கான் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

உ.பி.யின் முக்கிய முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான முப்தி ஒஸாமா நத்வீ, “அகிலேஷின் அரசியல் நிகழ்வுகளில் முஸ்லிம்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், உ.பி முஸ்லிம் சமூகம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வகையில் சமாஜ்வாதி எம்எல்ஏவான அதாவூர் ரஹ்மான் கூறுகையில், ‘ஆஸமுடன் சமாஜ்வாதி நிற்கவில்லை என்று சொல்வது முற்றிலும் தவறு. உ.பி அரசியலை மாற்றிய பாஜக, மதங்களின் மீதான வலையை பின்னியிருப்பதை சமாஜ்வாதி அறிகிறது. 2027 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சியை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதே சமாஜ்வாதியின் குறிக்கோள்’ எனத் தெரிவித்தார்.

Facebook Comments Box