ரயிலிலிருந்து சீறிப் பாய்ந்த அக்னி-பிரைம்!

இந்தியாவில் முதல்முறையாக ரயிலிலிருந்து ஏவப்பட்ட அக்னி-பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. நகரும் ரயில்களின் வழியாக ஏவுகணைகளை இயக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்து புதிய சாதனையை எட்டியுள்ளது.

ரயிலிலிருந்து காற்றை கிழித்து பாய்ந்தது அக்னி-பிரைம். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) முழுமையாக உள்நாட்டிலேயே உருவாக்கிய அக்னி ஏவுகணைகள், 2011 ஆம் ஆண்டிலிருந்து இந்திய ராணுவத்தின் வலிமையை உலகிற்கு காட்டி வருகின்றன.

எதிர்காலத்துக்கு ஏற்ப, அடுத்த தலைமுறை ஏவுகணையாக மேம்படுத்தப்பட்ட அக்னி-பிரைம் 2000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குறியிடங்களைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது. கண்டம் விட்டுக் கண்டம் பாயும் தன்மை உடைய இந்த ஏவுகணை பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது இந்தியா.

அக்னி-பிரைம் சோதனையில் வெற்றி கண்ட நிலையில், DRDO மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு பாராட்டு தெரிவித்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்ட இந்த ஏவுகணை, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ரயில்-லாஞ்சர் மூலம் ஏவப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

எந்த தடையும் இன்றி எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக்கூடிய அக்னி-பிரைம், குறுகிய நேரத்திலேயே எதிர்வினையாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், DRDO மற்றும் ஆயுதப் படைகளின் சாதனையை பாராட்டுகிறேன் என்றும் ராஜ்நாத்சிங் தனது எக்ஸ் பக்கத்தில் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்த வெற்றி, நகரும் ரயில்களிலிருந்து ஏவுகணைகளை ஏவிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் இணைத்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் அக்னி ஏவுகணைகளில் சில, 3500 முதல் 5000 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டவை. அவை அணுஆயுதங்களையும் சுமந்து செல்லக் கூடியவை என்பது சிறப்பம்சம்.

அக்னி-பிரைம் போன்ற மேம்பட்ட ஏவுகணைகளை அங்கிங்கெனச் சுலபமாக நகர்த்த இயலாது. எனவே அவை பொதுவாக நிலையான தளங்களிலிருந்தே ஏவப்படுகின்றன. ஆனால் ரயில்-லாஞ்சர் தொழில்நுட்பம் வந்ததால், இந்திய ராணுவம் எங்கும் எளிதாக எடுத்துச் சென்று இலக்குகளை குறிவைக்கும் திறனை பெற்றுள்ளது.

ஏவுகணைகளை ஒரே இடத்தில் வைத்திருப்பதால் எதிரி தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் உண்டு. ஆனால் நகரும் ரயில்களில் அவற்றை பதிப்பதால் அந்த அபாயம் குறைக்கப்படுகிறது என்று பாதுகாப்பு நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்தியாவின் விரிந்த ரயில்வே வலையமைப்பு, தேவையான வேளைகளில் ஏவுகணைகளை விரைவாகக் குவிக்க உதவும். மேலும் செயற்கைக்கோள் கண்காணிப்பிலிருந்து அவற்றை சுரங்கப்பாதைகளில் மறைக்கவும் முடியும். உண்மையில் ரயில்-லாஞ்சர் யோசனை பனிப்போர் காலத்திலேயே தொடங்கப்பட்டது.

1950களில் அமெரிக்கா Minuteman ஏவுகணைகளை ரயிலிலிருந்து செலுத்தும் சாத்தியங்களை ஆய்வு செய்தது. பின்னர் 1961ல் கைவிட்டது. 1980களில் மீண்டும் பரிசீலித்தாலும், சோவியத் யூனியன் உடைந்ததும் நிறுத்தப்பட்டது. ரஷ்யா RT-23 Molodets அமைப்பை பயன்படுத்தியது. பின்னர் ஆயுதக்குறைப்பு ஒப்பந்தத்தின்படி நீக்கப்பட்டது.

2016இல் ரஷ்யா DF-41 ரயில் மொபைல் லாஞ்சர் சோதனை செய்ததாகவும், வடகொரியா குறுகியதூர ஏவுகணைகளை ரயிலிலிருந்து ஏவியதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், சீனாவும் பாகிஸ்தானும் உள்ள எந்த இலக்கையும் அக்னி ஏவுகணைகள் குறிவைக்க முடியும். கடலுக்கு அடியில் அணுஆயுதங்களை சுமந்து தாக்கும் திறன் கொண்ட அக்னி வரிசை, இப்போது தரை, வான் மட்டுமல்லாமல் ரயில் லாஞ்சரிலும் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டிருப்பது இந்தியாவின் பாதுகாப்புத் திறனை மேலும் பலப்படுத்துகிறது.

Facebook Comments Box