ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் மாநிலங்களுக்கு கடும் பாதிப்பு: கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

ஜிஎஸ்டி கவுன்சிலை புறக்கணித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த வரி விகித மாற்றம் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17-வது மாநில மாநாடு குமரி மாவட்டம் குழித்துறையில், மாநில துணைத் தலைவர் என்.உஷாபாசி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

திருவள்ளுவர், பாரதி, ஈவேரா, அய்யா வைகுண்டர், ராமலிங்க அடிகளார், ஸ்ரீநாராயண குரு, முத்துலட்சுமி ரெட்டி ஆகியோரின் முயற்சியால் பெண்கள் முன்னேற்றம் அடைந்தனர். அவர்களைத் தொடர்ந்து இடதுசாரி முற்போக்கு இயக்கங்கள் சமூக அநீதிகளையும், பொருளாதார சுரண்டல்களையும் எதிர்த்து போராடின. அந்த வரலாறுகளை இம்மாநாட்டில் நினைவுகூர வேண்டும்.

2014-ல் ஆட்சிக்கு வந்தபோது, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம் என்று மோடி கூறினார். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் பெண்கள் மீதான குற்றங்கள் 70% அதிகரித்துள்ளன. கத்வா, பத்ராஸ், உன்னாவோ சம்பவங்கள் நாடு முழுவதையும் அதிர்ச்சியடைய வைத்தன. குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் போக, தண்டிக்கப்பட்டவர்களையே பாராட்டும் நிலை உருவாகியுள்ளது. தேசிய குற்றப்புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் 46% உயர்ந்துள்ளன. ஒவ்வொரு நாளும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகின்றனர். இதில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பைச் சுட்டிக்காட்டிய அவர், “ஜிஎஸ்டி வரி விகித மாற்றத்தை அறிவிப்பது ஜிஎஸ்டி கவுன்சிலின் பொறுப்பு. ஆனால் பிரதமரே அறிவித்து வருகிறார். கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் முன்வைத்த கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. வரி குறைப்பின் பலன் பொதுமக்களுக்கு சென்றடையவில்லை. மாறாக, மாநிலங்கள் முன்னேற்றம் அடைய தடையாக மாறியுள்ளது” என்றார்.

மாநாட்டில் அகில இந்திய மாதர் சங்கத் தலைவர் மற்றும் கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீமதி, துணைத் தலைவர் வாசுகி, துணைச் செயலாளர்கள் சுதா சுந்தரராமன், பி.சுகந்தி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, பொதுச்செயலாளர் அ.ராதிகா, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டு நிகழ்ச்சிகள் 27-ம் தேதி வரை நடைபெறுகின்றன

Facebook Comments Box