உக்ரைன் போரில் ரஷ்யாவின் திட்டம் குறித்து புதினிடம் மோடி கேட்டாரா? – நேட்டோ தலைவரின் கூற்றுக்கு இந்தியா கடுமையான மறுப்பு

உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினிடம், “உங்கள் திட்டம் என்ன?” என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியதாக நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தக் கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இடையிலான உரையாடல் குறித்து நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் கூறிய கருத்துகள் தவறானவை, ஆதாரமற்றவை. அவர் குறிப்பிட்டபடி, பிரதமர் மோடி, அதிபர் புதினிடம் ஒருபோதும் அத்தகைய கேள்விகளை எழுப்பவில்லை. அத்தகைய உரையாடல் எதுவும் நடந்ததில்லை. நேட்டோ போன்ற முக்கிய அமைப்பின் தலைமை, கருத்துகளை தெரிவிக்கும்போது அதிக பொறுப்பும் துல்லியமும் கடைபிடிக்க வேண்டும். பிரதமரின் செயல்பாடுகளை தவறாக சித்தரிக்கும் வகையிலான கற்பனையான அல்லது உண்மையற்ற கருத்துகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “ஏற்கெனவே கூறியபடி, இந்தியா தனது நுகர்வோருக்கு மலிவான மற்றும் கணிக்கக்கூடிய விலையில் எரிபொருள் கிடைக்கச் செய்வதற்காக எண்ணெய் இறக்குமதி செய்கிறது. நாட்டின் நலன்களையும் பொருளாதார பாதுகாப்பையும் காக்க இந்தியா தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது,” எனவும் வெளிவிவகாரத் துறை விளக்கியுள்ளது.

மார்க் ரூட் என்ன கூறினார்?

ஐ.நா. பொதுச் சபை கூட்டம் நடைபெற்ற நியூயார்க் நகரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட், “இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட ட்ரம்ப்பின் வரிகள் ரஷ்யாவை பெரிதும் பாதித்துள்ளன. டெல்லியில் இருந்து புதினுக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் செல்கின்றன. ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் தாக்குதலால் இந்தியா அதிக வரி சுமைகளைச் சந்திக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவின் உக்ரைன் போர்த் திட்டம் குறித்து புதினிடம் அவர் கேட்டுள்ளார்,” என்று கூறினார்.

இந்தக் கருத்தையே தற்போது இந்தியா வெளிப்படையாக மறுத்துள்ளது.

Facebook Comments Box