இந்தியா – பூடான் ரயில் இணைப்பு: ரூ.4,033 கோடி மதிப்பில் திட்டம்

இந்தியா மற்றும் பூடான் இடையே ரயில் பாதைகள் அமைக்க ஒப்பந்தம் எட்டியுள்ளதாகவும், மொத்தம் ரூ.4,033 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

அசாமின் கோக்ரஜார் – பூடானின் கெலெபு இடையே ஒரு பாதையும், மேற்கு வங்கத்தின் பனார்ஹெட் – பூடானின் சம்ட்சே இடையே மற்றொரு பாதையும் அமைக்கப்படவுள்ளது. இவை இந்தியா–பூடான் இடையிலான முதல் ரயில் இணைப்புத் திட்டங்களாகும். இந்தத் திட்டங்களுக்கு உரிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பூடான் சென்றபோது கையெழுத்தானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

“இந்தியா பூடானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி. பூடானின் பெரும்பாலான வர்த்தகம் இந்திய துறைமுகங்கள் வழியே நடைபெறுகிறது. எனவே தடையற்ற ரயில் இணைப்பு, பூடான் பொருளாதார வளர்ச்சிக்கும், உலகளாவிய வலையமைப்பை அணுகவும் அவசியமானது.

89 கிலோமீட்டர் நீளமுள்ள இத்திட்டங்கள், இந்திய ரயில்வே வலையமைப்பை (1.5 லட்சம் கி.மீ.) பூடானுடன் இணைக்க உதவும். கோக்ரஜார் – கெலெபு ரயில் பாதை 4 ஆண்டுகளில், பனார்ஹெட் – சம்ட்சே ரயில் பாதை 3 ஆண்டுகளில் உருவாக்கப்படும்.

கோக்ரஜார் – கெலெபு பாதையில் 29 பெரிய பாலங்கள், 65 சிறிய பாலங்கள், 39 சுரங்கப்பாதைகள், 2 ஷெட்கள், 1 மேம்பாலம் அமைக்கப்படும். பனார்ஹெட் – சம்ட்சே பாதையில் 2 நிலையங்கள், 1 பெரிய மேம்பாலம், 24 சிறிய மேம்பாலங்கள், 37 சுரங்கப்பாதைகள் கட்டப்படும்,” என்றார்.

Facebook Comments Box