பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆயுள் தண்டனையை எதிர்த்து பிரஜ்வல் ரேவண்ணா மேல்முறையீடு
பாலியல் வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3,000-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் 2024 ஏப்ரலில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, அவரது வீட்டு பணிப்பெண், மஜத கிராம பஞ்சாயத்து தலைவர் உட்பட நான்கு பெண்கள் அவருக்கு எதிராக புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்மீது 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பிரஜ்வல் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த எம்.பி., எம்.எல்.ஏ.களுக்கான சிறப்பு நீதிமன்றம், ஆகஸ்ட் 1-ஆம் தேதி பிரஜ்வலை குற்றவாளி என அறிவித்தது. “அரசு தரப்பு தாக்கல் செய்த சாட்சியங்களும் ஆவணங்களும் குற்றத்தை உறுதிப்படுத்துகின்றன” என நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் தெரிவித்தார்.
பின்னர் ஆகஸ்ட் 2-ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தண்டனையை ரத்து செய்யக் கோரி அவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,
- “பாதிக்கப்பட்டவர்களின் புகாரிலும், சாட்சியங்களிலும் முரண்பாடுகள் உள்ளன,
- போலீசார் கட்டாயப்படுத்தி புகார் அளிக்க வைத்துள்ளனர்,
- பல ஆண்டுகள் கழித்து படுக்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் கறை ஆதாரங்கள் நம்பகமற்றவை”
எனக் கூறி, சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார். இந்த மேல்முறையீடு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.