மும்பை தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவின் அழுத்தத்தால் பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்கவில்லை: ப.சிதம்பரம் ஒப்புதல்
மும்பை தாக்குதலுக்கு பதிலளித்து பாகிஸ்தானுக்கு எதிராக போரை தொடங்க வேண்டாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடுத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையின் முக்கிய இடங்களில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர், 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் பதவி விலகினார். அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
செய்தி சேனல் ஒன்றுக்கு ப.சிதம்பரம் கூறியதாவது: மும்பை தாக்குதலுக்கு பதிலளிக்க பாகிஸ்தானுக்கு ராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா பரிசீலித்தது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் அழுத்தம் மற்றும் மூத்த ராஜதந்திரிகளின் ஆலோசனை காரணமாக அந்த முடிவு கைவிடப்பட்டது. போரை தொடங்க வேண்டாம் என்று ஒட்டுமொத்த நாடுகளும் கூறின.
“நான் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற 2, 3 நாட்களுக்கு பிறகு என்னையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் சந்தித்தார். பதிலடி கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இது அரசு எடுக்க வேண்டிய முடிவு என்று நான் கூறினேன். ஆனாலும் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை என் மனதில் இருந்தது” என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.
பாஜக விமர்சனம்: இதையடுத்து ‘எக்ஸ்’ தளத்தில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது, “தேசம் அறிந்ததை 17 ஆண்டுகளுக்குப் பிறகு ப.சிதம்பரம் ஒப்புக்கொள்கிறார். வெளிநாட்டு சக்திகளின் அழுத்தம் காரணமாக அப்போது இந்த விவகாரம் தவறாக கையாளப்பட்டது. இது மிகவும் தாமதமான ஒப்புதல்’’ என்று விமர்சித்தார்.
ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தனது தலையீட்டால் நிறுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதை தொடர்ந்து மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்த நிலையில் ப.சிதம்பரத்தின் இந்த ஒப்புதல் வெளியாகியுள்ளது.