ம.பி.யில் குர்ஆன் கற்கும் 556 இந்து குழந்தைகள்: மதமாற்ற சந்தேகம்? – மனித உரிமை ஆணையம் விளக்கம் கோரி நோட்டீஸ்
மத்தியப் பிரதேசத்தில் செயல்படும் 27 மதரஸாக்களில் மொத்தம் 556 இந்து குழந்தைகளுக்கு குர்ஆன் கற்றுத் தரப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், “இது மதமாற்ற முயற்சியா?” என்று கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் ம.பி. அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ம.பி.யின் போபால், ஹோஷங்காபாத், ஜபல்பூர், ஜபுவா, தார், பர்வானி, காண்ட்வா, கார்கோன் மற்றும் பராசியா மாவட்டங்களில் அரசு அனுமதி பெறாத பல மதரஸாக்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் இந்து குழந்தைகளும் சேர்ந்து படிப்பதாகவும், அங்கே அவர்களுக்கு குர்ஆன் கற்பிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நடவடிக்கை, “இந்து குழந்தைகளுக்கு இஸ்லாமிய மதம் திணிக்கப்படுகிறதா?” என்ற சந்தேகத்தை கிளப்பியதால், அதுகுறித்த புகார் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு சென்றது.
அதன்படி ஆணையம் விசாரணை தொடங்கி, மத்தியப் பிரதேச அரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில்:
- இந்து குழந்தைகளுக்கு மதரஸாக்களில் குர்ஆன் கற்பிக்கப்படுகிறதா?
- மதமாற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதா?
- அரசு அனுமதி இல்லாமல் மதக் கல்வி நடத்தப்படுகிறதா? என கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்த புகாரின் அடிப்படையில், சிறார் நீதிச் சட்டம் 2015 மற்றும் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 28(3) ஆகியவற்றின் மீறல் ஏற்பட்டுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், அங்கு படிக்கும் இந்து குழந்தைகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அனுமதி இன்றி இயங்கும் மதரஸாக்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆணைய உறுப்பினர் பிரியங்க் கனூங்கோ கூறுகையில்:
“செப்டம்பர் 26-ம் தேதி ம.பி. மாநிலத்தில் சட்டவிரோத மதமாற்ற கும்பல் செயல்படுவதாக புகார் வந்தது. அதன்படி விசாரணை தொடங்கியுள்ளோம். அரசாங்கம் 15 நாட்களுக்குள் முழுமையான அறிக்கை அளிக்க வேண்டும்” என்றார்.