5 ஆண்டுகளுக்கு பின் இந்தியா – சீனா விமான சேவை மீண்டும் தொடக்கம் – முழுமையான தகவல்
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான நேரடி விமான சேவைகள், 5 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் அக்டோபர் 26-ம் தேதி மீண்டும் தொடங்க உள்ளன.
2020-ஆம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் இந்தியா-சீனா விமான சேவை நிறுத்தப்பட்டது. அதே ஆண்டின் ஜூன் 15-ம் தேதி, லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகளின் ராணுவத்தினருக்கு இடையே கடுமையான மோதல் நடந்தது. இதில் இந்தியாவிலிருந்து 20 வீரர்களும், சீனாவிலிருந்து 45 வீரர்களும் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகளின் உறவில் பெரிய பிளவு ஏற்பட்டது.
பின்னர், உலக நாடுகள் அனைத்திலும் விமான சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தபோதும், இந்தியா-சீனா விமான சேவைகள் தொடங்கப்படவில்லை. சர்வதேசத்தில் இரு நாடுகளும் மோதல் நிலையைத் தக்க வைத்திருந்தன. இதற்கிடையில், கடந்த மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாள் போர் நடந்தது. அப்போது பாகிஸ்தானுக்கு சீனா ராணுவ உதவிகள் செய்தது.
அமெரிக்கா 50% வரி விதித்தது: இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம் சாட்டி, இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 50% வரியை விதித்தார். இந்த வரி ஆகஸ்ட் மாதம் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பிய கடிதத்தில், “இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட வேண்டும்; எல்லை பிரச்சனையில் அமைதி ஏற்படுத்த வேண்டும்; அமெரிக்காவின் வரி போரை நிறுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டுக்கு பிரதமர் மோடியை அழைத்தார். அதன்படி, பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது இரு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். அதிலேயே விமான சேவையை மீண்டும் தொடங்க தீர்மானிக்கப்பட்டது.
இதன் படி, கொல்கத்தா – குவாங்சூ நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை அக்டோபர் 26-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதை மத்திய வெளியுறவு துறை உறுதிப்படுத்தியுள்ளது.
கொரோனா காலத்திற்கு முன், மாதந்தோறும் 539 நேரடி விமானங்கள் இந்தியா-சீனா இடையே இயங்கின. ஏர் இந்தியா, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ், சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களை இயக்கின. இதன்மூலம் மாதந்தோறும் சுமார் 1.25 லட்சம் பேர் பயணம் செய்தனர்.
விமான சேவை நிறுத்தப்பட்ட பின், இந்திய பயணிகள் வங்கதேசம், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் வழியாக சீனாவுக்கு சென்றனர். இப்போது மீண்டும் நேரடி சேவை தொடங்குவதால், விமானக் கட்டணம் 20% வரை குறையும், பயண நேரமும் குறையும். படிப்படியாக, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களிலிருந்து சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய் போன்ற முக்கிய நகரங்களுக்கு சேவைகள் விரிவடையும்.