பணிநீக்கம் செய்யப்படும் டிசிஎஸ் ஊழியர்களுக்கு 2 ஆண்டு வரையிலான ஊதியம் வழங்கப்படும்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் தற்போது சுமார் 6.13 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். 2026-ஆம் ஆண்டுக்குள் மொத்த ஊழியர்களில் 2% பேர் குறைக்கப்படுவார்கள் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் சுமார் 12,000 பேருக்கு பணிநீக்கம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பணி நீக்கம் செய்யப்படவுள்ள ஊழியர்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு வழங்கப்படும். அவர்களின் பணி அனுபவத்தைப் பொறுத்து 6 மாதங்களிலிருந்து அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரையிலான ஊதியம் இழப்பீடாக வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
- 8 மாதங்களுக்கு மேல் பணி ஒதுக்கப்படாமல் இருப்பவர்களுக்கு குறைந்தளவிலான இழப்பீடு வழங்கப்படும்.
- 10 முதல் 15 ஆண்டுகள் வரை சேவை செய்தவர்களுக்கு 18 மாத ஊதியம் கிடைக்கும்.
- 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு 24 மாத ஊதியம் வழங்கப்படும்.
மேலும், பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளைப் பெற தேவையான உதவிகளை டிசிஎஸ் வழங்கும். ஓய்வு பெறும் வயதுக்கு நெருங்கியவர்கள் விருப்ப ஓய்வு திட்டம் (VRS) மூலம் வெளியேறுவதற்கும் வாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.