பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த யூடியூபர் வாசிம் அக்ரம் கைது
ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தின் கோட் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசிம் அக்ரம். இவர் ஹிஸ்ட்ரி ஆப் மேவாட் என்ற பெயரில் யூடியூப் சேனலில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்ததாவது: கடந்த மூன்று ஆண்டுகளாக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ மற்றும் அந்நாட்டு தூதரகத்துக்கு உளவுத் தகவல்கள் வழங்கி வந்துள்ளார் வாசிம் அக்ரம். அவரின் செல்போனில் இருந்து வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
பாகிஸ்தானுக்காகவே உளவு பார்த்து வந்த தவுபிக் என்ற நபரை போலீஸார் கைது செய்து விசாரித்தபோது, வாசிம் அக்ரம் குறித்த தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
அக்ரம் மற்றும் தவுபிக் இருவரும் இணைய வழி அழைப்புகள் மூலம் ஐ.எஸ்.ஐ மற்றும் பாகிஸ்தான் தூதரகத்துடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.