மாபெரும் மாற்றத்தை உருவாக்கும் சிறிய “சிப்”
கடந்த 11 ஆண்டுகளில், இந்தியா மின்னணு உற்பத்தி துறையில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்றாக மாறியுள்ளது. மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்திக்கான முதலீட்டு திட்டங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு, ₹1.15 லட்சம் கோடி மதிப்பில் மத்திய அரசுக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கு முன், ‘செமிகான் இந்தியா 2025’ தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றி, செமிகண்டக்டர் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில் 18 பில்லியன் டாலருக்கும் மேற்பட்ட 10 திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும், இந்தியாவின் மிகச்சிறிய சிப் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் நாள் தொலைவில் இல்லை என்றும் கூறினார்.
மேலும் பிரதமர் மோடி, ஒற்றைச் சாளர அனுமதி, செமிகண்டக்டர் பூங்காக்களுக்கான ‘Plug and Play’ அமைப்புகள், திறமையான தொழிலாளர்கள், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகள், வடிவமைப்புடன் இணைந்த மானியங்கள் மற்றும் திறனை மேம்படுத்தும் திட்டங்களை எடுத்துக்காட்டி, உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு வலுவான அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், செமிகண்டக்டர் அல்லாத மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்திக்கான திட்டத்திற்கு கடந்த மார்ச் 28-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி, எதிர்கால மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தித் திட்டம் (ECMS) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் ₹59,350 கோடி முதலீட்டை ஈர்ப்பது, ₹4,56,500 கோடி மதிப்பிலான உற்பத்தியை விரிவாக்குவது, 91,600 பேருக்குக் கூடுதல் நேரடி வேலைவாய்ப்பு மற்றும் பல மறைமுக வேலைகளை உருவாக்குவது இலக்காகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம், இறக்குமதி சார்புநிலையை குறைத்து, நாட்டில் மின்னணு கூறுகளை உற்பத்தி செய்யும் வலுவான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த சூழலை உருவாக்குவதாகும். இரண்டாவது நோக்கம், உள்நாட்டுத் தொழிற்துறையை சர்வதேச விநியோகச் சங்கிலிகளுடன் இணைத்து, உலகளாவிய மின்னணு வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கினை விரிவுபடுத்துவதாகும்.
மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தித் திட்டத்தில் A, B, C மற்றும் E பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 30-ஆம் தேதி முடிவடைந்துள்ள நிலையில், ₹1,15,351 கோடி மதிப்புள்ள 249 விண்ணப்பங்கள் அரசு பெற்றுள்ளது. D பிரிவுக்கான விண்ணப்பம் 2027 ஏப்ரல் 30-ஆம் தேதி வரை திறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரபரப்பான விண்ணப்பங்கள், எதிர்பாராத அளவுக்கும் மேல் முன்மொழியப்பட்ட முதலீட்டுகளின் மதிப்பு, இந்தியாவின் நிலையான அரசு கொள்கை மற்றும் வெளிப்படையான நடவடிக்கைகளில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது. திட்டமிடப்பட்ட 91,600 வேலைவாய்ப்புடன் ஒப்பிடும்போது, சுமார் 1.41 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன் உறுதி செய்துள்ளார்.
2015-ம் நிதியாண்டில் ₹1.90 லட்சம் கோடி மதிப்புள்ள இந்திய மின்னணு உற்பத்தி, கடந்த நிதியாண்டில் ₹11.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது; இதனால், கடந்த 11 ஆண்டுகளில் ஆறு மடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், 500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள உள்நாட்டு மின்னணு உற்பத்தி சூழலை உருவாக்குவது பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டமாகும்.