அமெரிக்காவில் ஹைதராபாத் பல் மருத்துவர் துப்பாக்கிச்சூட்டில் கொலை
ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் பல் மருத்துவர் ஒருவர், அமெரிக்காவில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் பிஎன் நகரைச் சேர்ந்த போலே சந்திரசேகர் என்ற இளைஞர், பல் மருத்துவப் பட்டம் (BDS) முடித்த பிறகு, 2023ஆம் ஆண்டு மேற்படிப்புக்காக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநில டல்லஸ் நகருக்கு சென்றார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அவர் தனது மேற்படிப்பை முடித்தார். நிரந்தர வேலை கிடைக்கும் வரை ஒரு காஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர் சந்திரசேகரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி இந்திய சமூகத்தையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சந்திரசேகரின் மரணச் செய்தி ஹைதராபாத்தில் உள்ள அவரது குடும்பத்தினரை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மகன் வெளிநாட்டில் சிறந்த நிலையை அடைவார் என்ற நம்பிக்கையில் இருந்த பெற்றோர், திடீர் இழப்பால் துயரத்தில் உறைந்துள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஹரீஷ் ராவ் மற்றும் பிஆர்எஸ் கட்சி எம்.எல்.ஏ சுதீர் ரெட்டி ஆகியோர் சந்திரசேகரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
அத்துடன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, சந்திரசேகரின் உடலை விரைவாக சொந்த ஊருக்குக் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்