டார்ஜிலிங்கில் 12 மணி நேர மழை – 7 இடங்களில் நிலச்சரிவு; 17 பேர் உயிரிழப்பு – மம்தா பானர்ஜி நாளை வருகை

மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் பகுதியில் 12 மணி நேரம் இடைவிடாமல் பெய்த கனமழையால் 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நாளை (அக்.6) டார்ஜிலிங்குக்கு புறப்பட உள்ளார்.

சனிக்கிழமை ஏற்பட்ட கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு நிகழ்ந்ததால், வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, மேற்கு வங்கம் – சிக்கிம் மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சார்ஸ்லே, ஜெஸ்பீர்கான், மிரிக் பஸ்தி, தார் கான், மிரிக் லேக் ஏரியா போன்ற பகுதிகள் மிகுந்த சேதத்தை சந்தித்துள்ளன. மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் பேரிடர் மீட்பு படையினர் சேர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு நிவாரண உதவி அறிவித்திருக்கும் மம்தா பானர்ஜி, நாளை டார்ஜிலிங்கில் நேரில் சென்று பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளார்.

அவர் கூறியதாவது:

“பூடானில் பெய்த கனமழையால் வட மேற்கு வங்கம் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இது இயற்கை பேரிடர். இந்தச் சம்பவம் எங்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது. அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து நிலைமையை கவனித்து வருகிறேன்.

12 மணி நேரம் இடைவிடாது மழை பெய்ததால் 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நாளை பிற்பகல் டார்ஜிலிங்குக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன். சுற்றுலா பயணிகள் அங்கு சிக்கி உள்ளனர். அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன். விடுதி உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பேரிடருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாஜக உறுப்பினர்கள் மக்களுக்கு உதவிசெய்ய அனுப்பப்பட்டுள்ளனர் என அமித் ஷா கூறியுள்ளார். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன:

மழை மற்றும் நிலச்சரிவு பாதிப்பை அடுத்து டைகர் ஹில், ராக் கார்டன், டாய் ட்ரெயின் சேவை போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

டார்ஜிலிங் மட்டுமல்லாது சிலிகுரி, ஜல்பைகுரி, கூச் பெஹார் பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தசரா விடுமுறையை முன்னிட்டு அங்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அவர்களுக்காக காவல் கட்டுப்பாட்டு அறை 91478 89078 என்ற அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் கடும் நிலச்சரிவால் மீட்பு பணிகள் சிக்கலாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments Box